மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து துரை வைகோ எம்.பி கூறியதாவது “ பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திருச்சி மாநாட்டுக்கான ஏற்பாட்டு பணிகளை பார்வையிட இன்று திருச்சியில் முகாமிட்டிருந்தேன். முதற்கட்டமாக, மாநாடு ஏற்பாட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுக்களின் பொறுப்பாளர்களுடன் எனது அலுவலகத்தில் கலந்துரையாடி, அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தேன். மேலும், பணிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினேன்.
பின்னர், மாநாட்டுத் திடலுக்கு நேரில் சென்று, அங்கு நடைபெற்று வரும் ஏற்பாட்டுப் பணிகளை சுமார் ஒன்றரை மணி நேரம் பார்வையிட்டேன். குறிப்பாக, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் மற்றும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் வலியுறுத்தினேன்.
அனைவரும் உற்சாகத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வருவதைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள கழகத் தோழர்களும், தொண்டர்களும் மாநாட்டு நாளை ஆவலுடன் எதிர்நோக்கி, குடும்பமாகவும், நண்பர்களோடும் தயார் நிலையில் காத்திருப்பதை மாவட்டச் செயலாளர்களின் வாயிலாக அறிந்துவருகிறேன்.அனைவரின் ஈடுபாடு மற்றும் அயராத உழைப்பால், இம்மாநாடு மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்றார்