மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை (செப்டம்பர் 15ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த துரை வைகோ மாநாட்டு திடலில் மாநாடு மேடை, வாகன ஒருங்கிணைப்பு, குடிநீர் கழிப்பிட வசதி ஆகியவற்றிக்கான பணிகளை விரைவுபடுத்தச் சொல்லி இருந்தார்.இந்நிகழ்வின் போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்த மாநாட்டிற்கான கொள்கை முழக்கத்துடன் கூடிய டீசர்ட் வெளியிடப்பட்டது. டீசர்ட்டை வைகோ அறிமுகம் செய்து வைத்தார். இந்த டீசர்ட் தொண்டர் அணியினர் பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநாட்டிற்காக அக்கட்சியின் தொண்டர்களுக்கு துரை வைகோ அழைப்பு விடுத்துள்ளார். அதில், “32 ஆண்டுகளாக எத்தனையோ சோதனைகளை கடந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இயக்கம் இனம் மொழி மக்கள் இயற்கை ஆகியவற்றை காப்பதற்கான களத்தில் தனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு புதியதொரு உத்வேகத்துடன் தயாராகி வருகிறது என்பதை கட்டியம் கூறும் பெருவிழாவாக பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாடாக அமையட்டும்..!!. அணிதிரள்வோம்!. ஆர்ப்பரிப்போம்!. அங்கீகாரம் பெறுவோம்!. திருச்சியில் சங்கமிப்போம்..!” எனத் தெரிவித்துள்ளார்.