கோப்புப்படம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச்செயலாளர், திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம், மதிமுக வழங்கியிருந்தது. இந்த பட்டியலில் மொத்தமாக 16 தொகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், சிங்காநல்லூர் அல்லது பல்லடம் அல்லது கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் அந்த கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/21/mdmk-hq-2026-02-21-08-47-07.jpg)
மேலும், கடலூர் அல்லது புவனகிரி இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதி கிடைக்கப்பெற்றால் மதிமுகவின் முக்கிய தலைவர் செந்திலதிபன் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், மதுரை தெற்கு தொகுதியும் அப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடையநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாளையங்கோட்டை தொகுதியை நெல்லை மாட்டச் செயலாளர் நிஜாமிற்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அடுத்து, திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதிகளையும் உத்தேச பட்டியலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு சிவகாசி அல்லது விருதுநகர் தொகுதியை ரவிச்சந்திரனுக்குப் பரிந்துரைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதே போல, கடந்த முறை வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியையும் கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக, கோவில்பட்டி, மொடக்குறிச்சி மற்றும் தளி போன்ற தொகுதிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகளை வழங்க இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான், தொகுதிகள் ஒதுக்கீடு என்பது இறுதி செய்யப்படும் என்றும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மதிமுக அறிவித்துள்ளது. அந்த குழுவில் அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், மு. செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Follow Us