'May the fame and trouble of those who celebrate the festival spread..' - Preparations for Sahajananda's birthday celebration are in full swing Photograph: (cuddalore)
காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நந்தனார் என்ற மகான் வசித்து வந்துள்ளார். இவர் சிவபெருமானின் மகிமையின் மீது அசைக்க முடியாத அன்பு, ஒப்பற்ற பக்தி, தொழில் முறை, ஒழுக்கம் ஆகியவை அவரது தவிர்க்க முடியாத பண்புகளாக இருந்துள்ளது. இதனால் அவர் கோயில்களுக்கு வெளியே நின்று மனமுருகி பாடி ஆடி மகிழ்ச்சி அடைவார்.
இந்நிலையில் இவர் பல சிவாலயங்களுக்கு சென்று வணங்கி தன்னால் முடிந்த சேவைகளை செய்து வந்துள்ளார். அவர் அதே ஊரில் சிவபக்தரான பிராமண பண்ணையாரிடம் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்துள்ளார். நந்தனார் கிராம தெய்வங்களுக்கு கோழி, ஆடு பலியிட்டு வழிபடுவது மரபாக இருந்தபோது அது கூடாது என்று தடுத்து அவர்களை சிவ பக்தர்களாக மாற்றி வந்துள்ளார்.
நந்தனாருடன் வசிக்கும் பட்டியல் சமூகத்தினர் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபட அனுமதி இல்லை. கோவிலுக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசிக்க மட்டுமே அனுமதி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நந்தன் எப்படியாவது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று பதிகம் பாட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வந்தது. அதற்கு அவரது பண்ணையார் தடைவிதித்து வந்துள்ளார். அப்போது நந்தனார் நாளை போகலாம், நாளை போகலாம் என தனக்குள் ஆசையை அடக்கி வந்துள்ளார். இதனால் இவரை திருநாளை போவார் என்றும் அழைத்துள்ளனர்.
ஒரு நாள் நந்தனார் சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என கேட்டபோது அப்படி போவது என்றால் அறுவடையை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் பண்ணையார். கிட்டத்தட்ட 40 வேலி நிலத்தில் பயிரிட்டு ஒரே இரவில் எந்த மனிதனும் தனியாக அறுவடையை முடிக்க முடியாது. நமது சிதம்பரம் பயணம் அவ்வளவுதான் என்று நந்தன் மன வருத்தம் அடைந்து இருந்துள்ளாராம்.
இதை அறிந்த சிவனே நேரடியாக இரவோடு இரவாக 40 வேலியை அறுவடையை முடித்ததாகவும், இதனை பண்ணையார் கண்டு நந்தனின் பக்தி வலிமையை மெய்சிலிர்த்து அவரின் காலில் விழுந்து அவரை சிதம்பரம் போக அனுமதித்துள்ளார். சிதம்பரம் கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஈசனை எப்படி தரிசிப்பது என ஒமகுளம் பகுதியில் கவலையோடு இருந்துள்ளார்.
அப்போது சிதம்பரம் கோவில் பூசாரிகளின் கனவில் சிவன் தோன்றி அவரை கோவிலுக்கு அழைத்து வரும்படி சொல்லியதாகவும், ஈசனே சொன்னாலும் சாஸ்திரத்தை மீற முடியுமா? என்று கோவில் பூசாரிகள் நந்தன் கோவிலில் நுழைய வேண்டும் என்றால் தீக்குள் இறங்கி தனது பரிசுத்தத்தை நிறுப்பிக்க வேண்டும் அதன் பின்னரே கோவிலுக்குள் நுழையலாம் என தீர்ப்பளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தான் நந்தன் நடராஜர் கோவிலுக்கு தெற்கு புறத்தில் உள்ள ஓமகுளம் பகுதியில் தங்கியிருந்து நெருப்புக்குள் புகுந்து புது உடலோடு கோவிலுக்குள் சென்று ஈசனுடன் ஐக்கியமானார் என்பது கதை. இதனால் இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக திருநாளைப்போவார் என அழைக்கபடுகிறார் எனக்கூறப்படுகிறது.
நந்தனாரின் ஆன்மீக பக்தியை அறிந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுவாமி சகஜானந்தா இவரது ஆன்மீகத்தை அனைத்து மக்களும் அறியும் வகையிலும் எளிய மக்களுக்கு தொண்டாற்ற சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் நந்தனார் இருந்த இடத்தில் வசித்து அவரது புகழை பரப்பி வந்தார்.
பின்னர் அந்த இடத்தில் அனைத்து சமூகத்திலுள்ள ஏழை மக்கள் பிற்காலத்தில் கல்வியால் மட்டுமே உயர முடியும் என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 110 ஆண்டுகளுக்கு முன்பு திண்ணைப் பள்ளிகளை தொடங்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்துள்ளார்.
அப்படி அவர் அன்று உருவாக்கிய பள்ளிகள் இன்று நந்தனார் பெயரில் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என இரு பாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. அதேபோல் சுவாமி சகஜானந்த பெயரில் தொழிற்கல்வி கூடமும் இயங்குகிறது. இது அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தமிழகத்திலேயே மிகப்பெரிய பள்ளியாக உள்ளது.
இதுமட்டும் இல்லாமல் சகஜானந்தா 42 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி எளிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலித்துள்ளார், பட்டியல் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி அம்மக்கள் குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான உரிமையை பெற்று தந்துள்ளார். நந்தனார் வாழ்ந்த இடம் நந்தனார் மடமாக மாறியது. இதே இடத்தில் சாமி சகஜானந்தாவிற்கு சமாதி கோவிலும், சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயிலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் சகஜானந்தாவின் கல்வி சேவையை போற்றும் வகையில் நந்தனார் ஆண்கள் பள்ளிவாயிலில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது ஜன 27ம் தேதி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படியான புண்ணிய பூமியில் 1934 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்த இடத்திற்கு வந்து 2 நாட்கள் தங்கி நந்தனாரை மனமுறுகி வணங்கியுள்ளார். இது இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களுக்காக கல்வி சேவைக்காக திறக்கப்பட்ட ஒரே மடமாகும். இம்மடத்தில் ஜவஹர்லால் நேரு, காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட 51 தேசிய தலைவர்கள், 10 ஜனாதிபதிகள் வந்து வழிபட்ட புண்ணிய பூமி ஆகும். இதை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்த மறைந்த எல்.இளையபெருமாள் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழாவை நடத்தியுள்ளார். அதன் பிறகு கோயில் கட்டிடங்கள் மற்றும் நந்தனார் தியான மண்டபங்கள் சேதமடைந்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் மற்றும் நந்தனார் கல்விக்கழக உறுப்பினர்கள் இணைந்து நந்தனார் மடத்தை தற்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு புண்ணிய பூமியாக மாற்றும் வகையில் நவீன முறையில் கோயில் மற்றும் நந்தனார் தியான மண்டபம் சீரமைத்து அதில் நந்தனார் மற்றும் சுவாமி சகஜானந்தா வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட்டு கோவில் குடமுழுக்கு விழா வருகிற சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் ஜன 27-ந்தேதி தொடங்கி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் அனைத்து அரசியல் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள், நந்தனார் பள்ளியில் முன்னாள், இந்நாள் மாணவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். மடாதிபதிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் திருநாளை போவாரின் புகழ் திக்கெட்டும் பரவச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் வெகு விமர்சியாக துரிதமாக நடைபெற்று வருவது. இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow Us