தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அம்மாலு. இவரது மகன் குமார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வயதுடைய முத்துபாண்டி என்ற மகன் இருக்கிறார். முத்துபாண்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் இருவரும் வெளியே வேலைக்குச் சென்று வருகின்றனர். அதேபோல் பாட்டி அம்மாலுவும் கூலி வேலைக்குச் செல்வதால் தினமும் மாலை 6 மணிக்குத்தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை வழக்கமாக அம்மாலு கூலி வேலைக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்தவர்கள் பெரும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் இருந்துள்ளனர். இதனால் சிறு அச்சத்துடன் வீட்டிற்குச் சென்ற அம்மாலு, பேரன் முத்துபாண்டி வீட்டில் சட்டை கிழிந்து கையில் காயத்துடன் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டு துடித்துப் போயுள்ளார்.
என்ன நடந்தது என்று சிறுவன் முத்துபாண்டியிடம் கேட்டபோது, வழக்கமாக மாலை 5 மணிக்குப் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகே உள்ள காட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஆட்டோவைப் பார்த்து திடீரென எழுந்து நின்றுள்ளார். உடனே ஆட்டோவில் இருந்து முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் இயற்கை உபாதைக் கழித்துக்கொண்டிருந்த சிறுவனைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
பின்னர் ஆட்டோவில் வைத்து சிறுவன் முத்துபாண்டியின் ஆடைகளைக் கிழித்த அந்த மர்ம நபர்கள், சிறுவனின் கையைப் பிளேடால் கிழித்துள்ளனர். அதன்பிறகு, மூவரில் ஒருவர் தான் கையில் தயாராக வைத்திருந்த ஊசியை எடுத்து சிறுவனின் கழுத்தில் செலுத்த முற்பட்டுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட சிறுவன் முத்துபாண்டி, கூச்சலிட்டபடியே மூவரிடம் இருந்து தப்பித்து அங்கிருந்து வீட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
அலறல் சத்தத்துடன் சிறுவன் வருவதைப் பார்த்த கிராமத்தினர், சம்பவம் குறித்து உடனடியாக தென்கரைக் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமூடிக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இயற்கை உபாதைக் கழிக்கச் சென்ற சிறுவனுக்கு ஊசி செலுத்திய மர்மக் கும்பல் கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.