கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ரக்ஷிதா. இவருக்கும், பிலிக்கேரே கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜுவுக்கும் இடையே பழக்கம் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், ரக்ஷிதாவுக்கு, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும், முன்னாள் காதலரை மறக்க மனமில்லாமல் ரக்ஷிதா, சித்தராஜுவுடனான பழக்கத்தைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
ரக்ஷிதாவின் கணவர், துபாயில் வேலை பார்த்து வருவதால், கேரளாவில் ரக்ஷிதா கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே சமயம், அவ்வப்போது கர்நாடகத்தில் உள்ள சொந்த கிராமத்திற்குச் செல்வதாகக் கூறி, காதலன் சித்தராஜுவுடன் பல இடங்களுக்குச் சென்று சந்தோஷமாக இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், மைசூரில் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறி சித்தராஜு காதலி ரக்ஷிதாவை அழைத்துள்ளார். அதற்காக, அவரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார். பின்னர், இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு, பைரியா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி தனிமையில் இருந்திருக்கின்றனர். அதன்பின்னர், சித்தராஜு தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ரக்ஷிதாவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால், சித்தராஜுவைத் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பின்னர், அந்தத் தகராறு முற்றிய நிலையில், ரக்ஷிதாவை சித்தராஜு அடித்துத் தாக்கியிருக்கிறார். பின்னர், அவரது வாயில் ஜெலட்டின் குச்சிகளைத் திணித்து, பின்னர் அதனை வெடிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது வாய் கிழிந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெடி சத்தம் கேட்டு, லாட்ஜ் ஊழியர்கள் ஓடிவந்து கதவைத் தட்டியுள்ளனர். பின்பு, கதவைத் திறந்தவுடன், “என்ன நடந்தது? அது என்ன சத்தம்?” என்று கேட்டுள்ளனர். அதற்கு, திடீரென செல்போன் வெடித்து ரக்ஷிதா உயிரிழந்துவிட்டதாக சித்தராஜு தெரிவித்திருக்கிறார்.
ரக்ஷிதா ரத்த வெள்ளத்தில் தரையில் சடலமாகக் கிடந்தார். ஆனால், அந்த இடத்தில் செல்போன் வெடித்து இறந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாதது, லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வெடித்து சிதறிய அந்த செல்போன் எங்கே? என்று அவர்கள் கேட்க, மழுப்பலாகப் பதில் கூறி அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே, அவரைச் சுற்றி வளைத்து பிடித்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதலன் சித்தராஜுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ரக்ஷிதாவைக் கொலை செய்தது நான் தான் என்று ஒப்புக்கொண்டார். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மைசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். விஷ்ணுவர்தனா கூறுகையில், “கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளை அடையாளம் காண, தடய அறிவியல் நிபுணரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி சித்தராஜுவைக் கைது செய்துள்ளோம். அவரிடம் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரக்ஷிதாவின் வாயில் ஏற்பட்ட கடுமையான ரத்தக்கசிவு அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் முழு விவரமும் தெரியவரும்,” என்றார்.
கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி ரக்ஷிதா தனது ஆண் நண்பருடன் அடிக்கடி சுற்றித்திரிந்த சம்பவமும், தற்போது அவரால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.