மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் அதற்கான வழியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. இத்தகைய சூழலில்தான் குன்பி என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டால் அதன் மூலமாக இட ஒதுக்கீடு வழங்கலாம் என அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். அதனை அம்மாநில அரசு ஏற்காமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜராங்கே என்பவர் மும்பை அசாத் மைதானத்தில் கடந்த 5 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனைகளை மீறியுள்ளார். அதாவது 5 ஆயிரம் பேருக்கு அங்கு வரக்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்த நிலையில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் வந்துள்ளனர். மேலும் மைதானம் அமைந்துள்ள இடத்திலேயே போராட்டக்காரர்கள் இருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்பை உண்டாக்குகிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் தான் குன்பி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று மராட்டியர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரசு முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மனோஜ் ஜரங்கே ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து மனோஜ் ஜரங்கே கூறுகையில், “எங்களுக்கு இன்று (02.09.2025) தீபாவளி. ஏனெனில் நாங்கள் விரும்பியதைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் மாநில அமைச்சர் உதய் சாமந்த போராட்டம் நடைபெறும் ஆசாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற மராத்தா போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பாக முழு அறிவிப்புகள் வெளியாகும் வரை போராட்டக்காரர்கள் மும்பையிலேயே இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.