புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவமனைக் கழிவுகளை பிசானத்தூருக்கு கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட உள்ளது.

Advertisment

இந்த தகவல் பிசானத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தெரிய வந்த நிலையில், இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசுபடும் என்று கருதுகின்றனர். இதனால் பொதுமக்கள், விவசாயம், கால்நடைகள் நோய்த் தாக்குதல் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். ஆகவே, இந்த தொழிற்சாலையை பிசானத்தூரில் அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, புதன்கிழமை (9.10.2025) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

Untitled-1

இந்த நிலையில், வியாழக்கிழமை (10.10.2025) உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் கந்தர்வக்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செல்வக்குமார், வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல கிராம மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு, “இந்த ஆலையால் கிராமங்கள், கிராம மக்கள், விவசாயம் பாதிக்கப்படும். ஆகவே, இந்த தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது” என்று அனைவரும் கருத்து தெரிவித்ததுடன், மனுக்களாகவும் கொடுத்தனர். அப்போது ஒருவர் மட்டும் ஆலை பாதுகாப்பாக செயல்படும் என்று சொன்னார் என்று கூறியபோது, அனைவரும் எழுந்து கூச்சலிட்டதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

மேலும், “இதோ மேலே அமர்ந்துள்ள அதிகாரிகள் தான் பாதிப்பு வராது என்று சான்று வழங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனெனில், அவர்கள் எல்லாம் வெளியூர்க்காரர்கள், வெளியூர் சென்றுவிடுவார்கள். ஆனால், முழுமையாக பாதிக்கப்படுவது நாங்கள் தான்” என்று பேசினர். “இதையும் தாண்டி தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டால், முழுமையாக பெண்களே போராட்டங்கள் நடத்துவோம்” என்றனர் பெண்கள். மக்களின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட கருத்துக் கேட்புக் குழு, “உங்கள் கருத்துகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்” என்று கூறினர்.

Advertisment