முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் கூட்டாகப் பங்கேற்று முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனைக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா, ஒன்றிய செயலாளர்களாக பதவி வகித்து வந்த இருந்த தம்பி (எ) சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் தலைவர்களான மௌலீஸ்வரன், முத்துசாமி மற்றும் அத்தாணி அதிமுக பேரூர் செயலாளராக இருந்த ரமேஷ் என 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இன்று மதியம் 12:30 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us