திரைத்துறையில் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் இறுதிசெய்யப்பட்ட நாமினேஷ் பட்டியல், பின்பு மார்ச்சில் விருது வழங்கும் விழா, அடுத்து விருது குழுவில் இணையும் புது உறுப்பினர்கள் குறித்த பட்டியல் என அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதனை விருது வழங்கும் குழுவான அகாடமி குழு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான நாமினேஷன் பட்டியல், விருது வழங்கு விழா முடிந்த நிலையில் தற்போது இந்தாண்டிற்கான புது உறுப்பினர்கள் சேர்ப்பது தொடர்பான பட்டியலை அகாடமி குழு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறைக் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். இந்தாண்டிற்கான பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இவரை தவிர்த்து இந்தியத் திரையுலகை பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 16 பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக அளவில் மொத்தம் 531 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் குழுவில் இணையப்போகும் நடிகர் கமல்ஹாசனுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர்-கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! மொழி-தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது!' என பதிவிட்டுள்ளார்.