திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை 8:35 மணிக்கு மன்னார்குடியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் திருவெறும்பூர் பகுதியில் சென்றபோது ரயில் மோதி ஒருவர் ரயில்வே ட்ராக்கில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பொன்மலை போலீசார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் ஆசாரி என்பது தெரியவந்துள்ளது.
இது தற்கொலை சம்பவமா அல்லது ரயிலே ட்ராக்கை கடக்க முற்பட்டபோது நடந்த விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ரயில்வே ட்ராக்கில் கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.