“தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்” - மணிகண்டன்
ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கங்கள் ஒன்று கூடத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் கந்தர்வக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் ஆ.மணிகண்டன் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் உரிமையான பணியாளர் தேர்வு முறையை கேள்விக்குறியாக்கும் எந்த நடைமுறையையும் காத்திரமாக எதிர்க்கும் தமிழ்நாடு அரசு தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரணமான சூழ்நிலையையும் பாதுகாப்பான நிலையாக மாற்றிட கோரிக்கை விடுக்கிறோம். மேலும், கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியானது அடிப்படை உரிமை என்கிற அந்தஸ்தை வழங்கியது. மேலும், இந்த கல்வி உரிமைச் சட்டத்தில் சில சரத்துகளும் சேர்க்கப்பட்டது அதில் குழந்தைகளுக்கு அடிப்படை திறன்கள் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த சட்டத்தில் கூடுதல் சரத்தாக இருந்தது. இந்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு என்ற ஒரு தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் 2011 ஆம் ஆண்டு நடத்தியது.... இந்த தேர்வுக்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பாட அறிவு, குழந்தைகளை வழிநடத்துவதற்கான கல்வி, உளவியல், பொது அறிவு உள்ளிட்ட பொருண்மைகளில் ஆசிரியர்களின் திறனை சோதிக்கும் விதத்தில் என்சிடிஇ வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற ஒரு தேர்வு முறையை அரசு முன்மொழிந்த உடன் தேர்வு பாடத்திட்டத்தில் சில திருத்தங்களுடன் தேர்வுக்கான பொருண்மைகள் வகுக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் கிட்டத்தட்ட 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட வினாத்தாள் அமைப்பு மற்றும் கல்வி, உளவியல் பாடம் சார்ந்த அறிவு உள்ளிட்டவை ஒரே மாதிரியானவை.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு முறையில் ஒரு தனிப்பட்ட பாடத்தில் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் அந்தந்த பாடத்தின் அறிவுத்திறன் முழுமையாக சோதிக்கப்பட்டது ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் பொதுவான திறன்கள் மட்டுமே சோதிக்கப்பட்டது எது எப்படியாக இருந்தாலும் இரண்டு முறைகளிலும் ஆசிரியர்களின் #தனித்திறன் அடிப்படையில் தேர்வு முறை நடந்து அந்தந்த மாநிலத்தின் ஆசிரியர் தேர்வு வாரியங்கள் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து தகுதி உள்ளவர்களை அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக நியமித்தது....
இது இப்படி இருக்கும்போது கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி போதிப்பவர்களுக்கான தனித்தகுதியாக கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்திருக்க வேண்டும் என்று தற்போது மாண்பமை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை பொருத்தவரையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கிறார்கள் இவர்களுக்கும் இதே #பட்டதாரி ஆசிரியர்கள் தான் போதிக்கும் நிலை இருக்கிறது, அந்த மாணவர்களின் கல்வி நிலை சார்ந்து இந்த கல்வியை உரிமைச் சட்டம் எவ்விதத்திலும் நேரடியாக தொடர்பு கொண்டிருக்க வில்லை எனும் போது உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக டெட் தேர்வு எழுதி இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு 2003 ஆம் ஆண்டு வந்தது தான் காரணமாக இருக்கிறது.
உண்மையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் போதித்து வந்திருந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்களை ஆறாம் வகுப்பு முதல் போதிப்பதற்காக மாற்றியமைத்து அந்நாளைய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்....
அனைத்து அரசுப் பணி மற்றும் ஆசிரியர் பணியில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் தேர்வு நிலை என்ற நிலையை எட்டி விடுவார்கள் அதன் பிறகு கூடுதலாக ஒரே பதவியில் 20 ஆண்டுகள் பணியாற்றுபவர்கள் சிறப்பு நிலையை என்ற நிலையை எட்டுவார்கள். இது இப்படி இருக்கும்போது பத்தாண்டுகள் நிறைவுற்ற பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு நிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்ற நிலையில் அவர்களது பணி நிலைக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலைதான் சிறப்பு நிலைக்கும் செய்யப்படுகிறது. இந்த நிலையைக்கருத்திற் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களின் முதலாவதாக நியமனம் பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் என்றும் இவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை போதிப்பார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து #தேர்வுநிலை பெறுபவர்கள் தேர்வு நிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்றும் நிலையை மாற்றி, தேர்வு நிலை/சிறப்பு நிலை பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து உயர்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கு அரசு முன்மொழிந்து, பட்டதாரி ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்/தேர்வுநிலை பட்டதாரி ஆசிரியர்/சிறப்பு நிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்து புதிய அரசாணையை பிறப்பித்தால் இந்த சட்டச்சிக்கலிலிருந்து ஒரு தெளிவான நிலையை உண்டாக்கி விட முடியும்....
இதேபோன்று #மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்று மருத்துவர்களாக பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு நீட் தேர்வு மீண்டும் எழுத வேண்டும் என்பது போல, இந்திய ஆட்சிப் பணித்தேர்வை நேரடியாக எழுதாமல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தேர்ந்தெடுத்து தற்போது கன்பர்டு #ஐஏஎஸ் ஆக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ஆட்சிப் பணி ஏற்புடையதல்ல என்பது போல,
காவல்துறை ,பொறியியல், தொழில்நுட்பம், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாளர்கள், பணியாளர்கள் என அனைத்து துறையிலும் தேர்வு செய்யப்பட்ட தேர்வுகள் அவ்வப்போது புதுப்பித்தால்தான் அவர்கள் தொடர முடியும் என்பது போல இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது, அவ்வப்போது நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஏற்படுத்தப்படும் சட்ட முன் வரைவுகள் சட்ட திருத்தங்கள் அடிப்படையில் ஒவ்வொரு நிலையிலும் தகுதி தேர்வுகளை எழுத வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் இதேபோன்று தீர்ப்பு வந்தால் என்ன ஆகும் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
எனவே இது போன்ற தீர்ப்புகளை அதன் உள்நோக்கம் புரிந்து ஆரம்பநிலையிலேயே சரி செய்யவில்லை எனில் தமிழகத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் சூழல் உருவாகும். தமிழக அரசின் உரிமையை தொடர்ந்து நிலைநாட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதற்கும் நல்ல தீர்வினை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றுகிற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வும் ஆசிரியர் தகுதி தேர்வும் இணையானது என்ற கொள்கை முடிவினை அரசு எடுத்து அறிவிக்கும் போது நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படும். மேல்முறையீடு என்பது நிச்சயமாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அரசு கொள்கை ரீதியில் முடிவெடுத்து ஆசிரியர்களுக்கு துணை புரிய வேண்டுமென என்றென்றும் எங்களது குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், முதல்வரின் உற்ற துணையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.