மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் 100 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் "சங்கத்தின் 100 ஆண்டு பயணம் - புதிய எல்லைகள்" என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் சொற்பொழிவு விழா நேற்று (08.02.2026) நடைபெற்றது. அந்த குழுவில், “சாவர்க்கருக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில், “நான் விருது வழங்கும் குழுவில் இல்லை. இருப்பினும், அக்குழுவில் உள்ள யாரையேனும் சந்தித்தால், தான் அந்த கேள்வியை முன் வைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினால். அந்த விருதின் கௌரவம் தான் அதிகரிக்கும்” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், இந்த கருத்திற்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இது தொடார்பாக அவர் அளித்த பேட்டியில், “ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நாம் பாரத ரத்னா விருது வழங்க முடியாது. அவ்வாறு, ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருதுகளை வழங்கினால், அது அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் உள்ளிட்ட நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரிய அவமதிப்பாகும்” என்று தெரிவித்தார்.
அதே போன்று, காங்கிரசின் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய், இந்த கருத்துக்களுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். அதாவது, “காங்கிரஸ், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த போது சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு உதவி செய்து வந்தார். அவர் ஒரு பாசிசவாதி. அவருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்க முடியும்?. வேண்டுமானால் மோகன் பகவத் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சாவர்க்கருக்கு பிரிட்டிஷ் ரத்னா விருது வழங்க அறிவுறுத்தலாம்” என்று கூறியுள்ளார்.
Follow Us