கோப்புப்படம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் சேவைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன. அதாவது கடந்த 20ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 164 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 4 நாட்களாக ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று (23.02.2026) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ரயில் சேவைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 4 நாட்களாக இயக்கப்பட்டு வந்த 164 ரயில் சேவைகளில் இருந்து 115 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மேலும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக முறையான முன்னறிவிப்பு இன்றி ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், பணிக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11வது நடைமேடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து, மீண்டும் முழுமையான அளவில் ரயில்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம் குறித்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தெளிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை புறநகர் ரயில் சேவையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தின் இரு மார்க்கத்திலும் வழக்கமாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 164 சேவைகளாக குறைக்கப்பட்டு தற்போது 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/24/ashwini-vaishnaw-2026-02-24-11-22-55.jpg)
இந்நிலையில் இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள், தினசரி பயணிகள் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே என்பது மாநில அரசின் கீழ் அல்ல; இது மத்திய அரசின் பொறுப்பு. இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது. ஏன் தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன?. ஏன் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை?. ஏன் பொதுமக்களுக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை?.
தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் இல்லை என்று விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்க வேண்டும். மக்கள் நலனை விட அரசியல் முக்கியமா?. சென்னை மக்களின் துயரத்தை உடனடியாக தீர்க்க ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்கவும், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும், பயணிகளுக்குத் தெளிவான விளக்கம் வழங்கவும். பொதுமக்கள் சிரமப்படும்போது மௌனம் காக்கும் ரயில்வே அமைச்சரின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் சேவை என்பது அரசியல் சுலோகம் அல்ல. அது பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us