சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டியிருந்தார். இத்தகைய சூழலில் தான் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் கடந்த 25ஆம் தேதி (25.01.2026) திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகர செயலாளர் கோ. தளபதி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, “காங்கிரஸ் கட்சியில் சிலர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரைத் தான் சொல்கிறேன். அவர்கள் எம்.பி ஆகிவிட்டார்கள். அவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெற்றலாம் தலைமை புரிந்து கொண்டு அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணியை நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று பேசியிருந்தார். இந்த பேச்சை சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது” எனப் பதிவிட்டிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/30/rahul-kanimozhi-2026-01-30-15-29-39.jpg)
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று முன்தினம் (28.01.2026) டெல்லியில் திமுக எம்.பி கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களில், “மதுரை வடக்கு சட்டமன்ற வாக்காளர்களின் ஓட்டுக் காங்கிரசின் கை சின்னத்திற்கே” என்ற வாசகங்களைக் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டது. இவ்வாறாக ஒட்டப்பட்ட போஸ்டர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் விரும்புகிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துப் பேசுகையில், “எல்லா தொகுதிக்கும் விருப்ப மனு கொடுக்கிறார்கள். இந்த தொகுதியில் காங்கிரஸ் முதலில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலமாக இருக்கிற தொகுதி.
பாராளுமன்ற கூட்டத்தொடர் இருப்பதால் அங்கு வர முடியவில்லை. 13ஆம் தேதிக்குப் பிறகு தொகுதியினுடைய பிஎல்ஏ கூட்டம் நடத்த உள்ளோம். அதில் காங்கிரஸ் கட்சியின் பலத்தைக் காட்டுவோம். சும்மா விட்டுவிட்டு போயிருவோம் என்று நினைக்கிறீர்களா?. சும்மா பாத்துட்டு திரும்பி போகிறதுக்குக் காங்கிரஸ்காரன் ஒன்றும் வந்தேமாதரம் ஜெய் என்று சொல்வது மட்டும் கிடையாது திருப்பி அடிக்க தெரியும். தேர்தல் அறிவிக்கட்டும் கூட்டணி பேசட்டும் தொகுதி பங்கிட்டு வரட்டும். அதற்கு அப்புறம் இந்த பேச்சு வர வேண்டும். அதக்கு நிறைய நாள் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக செல்லப் பெருந்தகை, “மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைக் குறிப்பிட்டு, “தமிழ்நாடு காங்கிரஸ் தோழர்களை அவதூறாகப் பேசிய மாவட்டச் செயலர் மீது நடவடிக்கை கோரிய செல்வப்பெருந்தகையின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனக் காத்து இருக்கிறோம்” எனவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us