ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிடுவோம் என்ற ரீதியில் திமுகவுக்கு காங்கிரஸ் தரப்பினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றால் தான் ராகுல் காந்தி பிரதமராக முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் நேற்று தெரிவித்தார். நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மணி சங்கர் அய்யர், “இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்கப்பட்டால், அதற்கான சிறந்த ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று நான் நினைக்கின்றேன். இந்திய தொகுதியை ஒருங்கிணைப்பதற்கு தனது முழு நேரத்தையும் செலவு செய்வதற்கு யாரேனும் இருந்தால், ராகுல் காந்தி பிரதமராக முடியும்.

Advertisment

கடந்த ஓராண்டு காலமாக மு.க.ஸ்டாலின் செய்து வரும் அரசியல், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பொருத்தமான ஒன்றாகும். எனவே, இந்தியா கூட்டணியின் தலைவராக இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் சிறந்த நபராக இருப்பார். அதே நேரத்தில், அவர் ராகுல் காந்தி பிரதமராவதற்கு தடையாக இருக்க மாட்டார்” என்று தெரிவித்தார். இவரின் பேச்சு காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவராக உள்ள மணி சங்கர் அய்யருக்கு, தற்போது எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் இவரின் பேச்சி கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மணி சங்கருக்கு வயதாகிவிட்டது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம் செய்துள்ளார். மதுரையில் இன்று (17-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், “மணி சங்கருக்கு வயதாகிவிட்டது. வயது மூப்பின் காரணமாக அவர் மிகவும் விரக்தியில் உள்ளார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தலைமை கேட்டது. செல்வப்பெருந்தகைக்கும் எனக்கும் நடப்பது அண்ணன் தம்பிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை தான்” என்று கூறினார். 

Advertisment