தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்துள்ளது. இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிகாரப் பங்கீட்டிற்கு நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற மாணிக்கம் தாகூரின் கோரிக்கையை காங்கிரஸின் 2ஆம் கட்ட தலைவர்கள் ஆமோதித்தனர். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால் திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உதவும், எனவே ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூறினார். ஆனால், இந்த விவகாரம் குறித்து திமுக எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது. இதனால், திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டதாக கருத்து நிலவியது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறதே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கேட்பது அவர் உரிமை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பது எப்போதும் கிடையாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியினுடைய ஆட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அவரவருக்கு ஒரு கருத்து இருக்கிறது.
முடிவெடுக்க போகிறவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையும் தான். காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு வருகிறோம். கிரிஷ் சோடான்கர் தலைமையில் குழு அமைத்துள்ளார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவோம். இந்த பேச்சுவார்த்தையில் எல்லாம் சுமுகமாக முடியும் என்று முழுமையாக நம்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த செய்தியை மேற்கோள்காட்டி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் அண்ணா செல்வப்பெருந்தகை என்று குறிப்பிட்டு ‘ஆட்சியில் பங்கு’ என்ற ஹேஸ்டேக்கை பகிர்ந்துள்ளார்.
Follow Us