விருதுநகரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து, ஜனவரி 11-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 30-ஆம் தேதி காந்தி நினைவு நாளில் சத்தியாகிரக போராட்டமும் நடைபெற உள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என்றும், முன்பு கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் அதிமுகவுக்கு அழுத்தம் தந்துள்ளார்.
தேசிய அரசியலில் கூட்டணி ஆட்சி நிலவுவது போல, மாநில அரசியலிலும் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நேரடியாக எதிர்த்து நிற்பவர்கள் காங்கிரஸ் கட்சியினரே. ஐ.பி.டி.எஸ். நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், 2026 சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைத்தால்தான் ஆட்சி சாத்தியம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அந்த கணிப்பின்படி, இண்டி கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதைவிட 4 சதவீதம் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்க வேண்டுமெனில், கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. டெல்லியில் அதிகாரப் பகிர்வுக்கு காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளதைப் போல, தமிழகத்திலும் 2026-ஆம் ஆண்டில் இதே நிலை உருவாகும்.
பெண்களுக்கு ரூ.2,200 நிதியுதவி, விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம், மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் உரிய அதிகாரப் பங்கு அவசியம் என கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் தெரிவித்துள்ளார், இதனை மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஏற்றுக் கொண்டுள்ளார். வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் தேவைப்படும் சூழலில், அதிகாரப் பகிர்வை மறுப்பது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுகிறது.
இண்டி கூட்டணியில் சி.பி.எம். அமைச்சரவையில் இடம் வேண்டாம் என தெரிவித்தால், அது அவர்களின் முடிவு. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் உரிய அதிகாரம் அவசியம். கருத்துக்கணிப்புகள் கூட்டணி ஆட்சியை நோக்கியே அரசியல் நகர்கிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஸ்டாலினே ஆட்சி அமைப்பார். மேலும், கூட்டணி விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே அமைத்த குழு, தி.மு.க. கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. ராகுல் காந்தி ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அதனால்தான் பல அரசியல் கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/mani-2026-01-06-12-47-19.jpg)