ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் நாளுக்கு நாள் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்த போதிலும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக எழுப்பி வருகின்றனர். இதற்கு திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாராளுமன்றத்தில் யார் பலமாக சண்டை போட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். பா.ஜ.கவை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸ்காரனுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்காரர்களை எதிர்ப்பதாக சொல்லிவிட்டு சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது. இருக்கிறது கஞ்சியோ, கூலோ தைரியமாக இருக்கிறவன் தான் காங்கிரஸ்காரன். எங்களை பொறுத்தவரையில் அன்போடும் மரியாதையோடும் எங்களை நடத்தினால் அன்போடும் மரியாதையோடும் நடத்துவோம். எங்களை எதிர்த்து எங்களை அவமானப்படுத்தி எங்களை கீழ்த்தரமாக பேச நினைத்தவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய அதே மொழியில் பதில் தந்தவன் தான் காங்கிரஸ்காரன்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இன்றைக்கு தேதிப்படி 70 நாள் ஆகிறது. காங்கிரஸ் கட்சியினுடைய குழு பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கிறது. பிப்ரவரி 22ஆம் தேதி குழு அமைக்கப்படும் என்று திமுகவினுடைய தோழமை கட்சியினுடைய அறிவிப்பு வந்திருக்கிறது. அதுவரைக்கும் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. நம்மை பொறுத்தவரையில் தோழமையை மதிக்கிறோம், தோழமைக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம். அதை போலவே நாமும் எதிர்பார்க்கிறோம். என்னை பொறுத்தவளவில் நாம் வரம்பு மீறி பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் கட்டுப்பாடுள்ள கட்சி, ஜனநாயகக் கட்சி. நம்முடைய தலைமை, இப்போது திமுகவுடன் பேசுவதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். நாம் ஒரு பெரிய கப்பல் மாதிரி. சில ஜாதி கட்சி எல்லாம் இருக்கும், லெப்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிவிடுவார்கள். அது மாதிரி காங்கிரஸ் கட்சி செய்யாது. நாம் கேட்பதெல்லாம் மரியாதை, சொத்து சுகம் எல்லாம் கேட்கவில்லை. மரியாதையை தான் கேட்கிறோம். நாம் என்ன கொடுக்கிறமோ அதை தான் கேட்கிறோம்.

Advertisment

திமுக மாவட்டச் செயலாளர் ஒரு பேசியதும், ஒரு அமைச்சர் பேசியது வலியை தருகிறது. உங்களுடன் இருந்து நீங்கள் செய்த பல தவறுகளுக்காக் பழி ஏற்றவர்கள் நாங்கள். பழியை சுமந்தவர்கள் நாங்கள். நீங்கள் செய்த தவறுக்கெல்லாம் பழி ஏற்றுக்கொண்டோம். ஆனால், உங்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் மரியாதை தான். மாவட்டச் செயலாளராக இருக்கும் தளபதி பேசிய பேச்சு வருத்தத்தை தருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜனவரி 26ஆம் தேதி ட்விட் போட்டிருந்தார். ஆனால், இன்றைய தேதிக்கு வரைக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. ஒரு மாவட்டச் செயலாளர் பேச ஆரம்பித்து அமைச்சர்களும் பேச தொடங்கிவிட்டார்கள், இதை கேட்டுவிட்டு சும்மா இருப்பவன் நான் கிடையாது.

காங்கிரஸ்தான் என் உயிர், மரியாதை, அன்புதான் கேட்கிறோம். காங்கிரஸை சாதாரணமாக நினைத்து பேசுகின்றனர். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி திருப்பி அடிப்போம். திருப்பி அதே வார்த்தையை பேசுவோம். அதனால் காங்கிரஸ்காரனுக்கு மரியாதை கொடுத்தால் மரியாதை தருவோம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். என்னை பொறுத்தவரையில் எம்.பி பதவி முக்கியம் இல்லை, கட்சி தான் முக்கியம். காங்கிரஸ் கட்சியினுடைய தன்மானம் தான் முக்கியம். எனக்கு காங்கிரஸ் தான் உயிர். அதனால் என்னுடைய உயிர் சாகும் வரை காங்கிரஸ்காரனாகவே தான் சாவேன். நம்முடைய போராட்டம் காங்கிரஸ்காரனுக்கு மரியாதைக்கான போராட்டம்” எனப் பேசினார்.