அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியைச் சேர்ந்தவர் சக்தி. காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா. இந்தத் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லட்சுமி பிரியா விளையாட்டுப் பிரிவில் தேர்வாகி காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். முன்னதாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு பணிமாற்றம் பெற்று அங்கு பணியாற்றி வந்துள்ளார். இதற்காக பால்வண்ணன் என்பவரின் வீட்டின் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 4-ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் காலை காவல் நிலையத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. ஆனால், உதவி ஆய்வாளர் லட்சுமி பிரியா நீண்ட நேரமாகியும் அணிவகுப்புக்கு வராததால் சக போலீசார் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் எஸ்.ஐ. லட்சுமி பிரியா போனை எடுக்காததால், சந்தேகமடைந்த மணமேல்குடி காவல்துறையினர், காவலர்கள் பால்ராஜ், ரோஸ்லின் ஜெர்சி ஆகியோரை அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
லட்சுமி பிரியாவின் வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால், போலீசார் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், லட்சுமி பிரியா கதவைத் திறக்காததால், வீட்டின் உரிமையாளரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ந்துள்ளனர். காலை காவல் நிலையத்திற்கு கிளம்பிய எஸ்.ஐ. லட்சுமி பிரியா தனது காவல் சீருடையை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார். அப்போது அயன் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி லட்சுமி பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இதைப் பார்த்த போலீசார் கதறி அழுததுடன், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி. காயத்திரி, மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பரோஸ்கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து எஸ்.ஐ.யின் உடலை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லட்சுமி பிரியாவின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
பணியில் துடுக்காக இருக்கும் எஸ்.ஐ. லட்சுமி பிரியா விடுமுறை நாட்களில் பார்களில் மது விற்பனையைத் தடுத்துள்ளார். கடந்த வாரம் அத்தாணி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஆளும் கட்சியின் புள்ளிகள் அறிவுறுத்தியபோதும், அசராமல் இந்த எஸ்.ஐ. லட்சுமி பிரியாவும், இன்ஸ்பெக்டரும் சேர்ந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சமரசம் இல்லாமல் தைரியமாகப் பணி செய்தவர் தான் இந்த எஸ்.ஐ. லட்சுமி பிரியா என்கின்றனர் சக காவல்துறையினர்.
பணிக்கு கிளம்பிய பெண் எஸ்.ஐ. மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/04/1-2025-10-04-14-40-13.jpg)