வேலூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டிற்கு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அதன்படி மாநாடு முடிந்தவுடன் அங்கிருந்து காரில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திருச்சி அருகே வந்தபோது உணவு அருந்துவதற்காக காரில் இருந்த அனைவரும் காரில் இருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு உணவு அருந்திவிட்டு மீண்டும் காரில் ஏறும் போது மதன் மட்டும் அங்கிருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் மதனை அவரது நண்பர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததாலும், நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதாலும் அங்கிருந்து மதனின் நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி வேலூருக்கு சென்றுள்ளனர். இது குறித்து மதனுடைய உறவினர்களிடம் மதன் காணவில்லை எனக் கூறியுள்ளனர். அதோடு மதனின் மொபைல் நம்பருக்கு போன் செய்தாலும் சுவிட்ச் ஆஃப் என வந்தது. இது குறித்து போலீசில் புகாரும் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் சாலை விபத்தில் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது மதனுடைய உடலாக இருக்கலாம் என அடையாளம் காணும்படி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற மதனின் உறவினர்கள் அவருடைய உடலை அடையாளம் கண்டனர். அதில் உயிரிழந்தது மதனின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வேலூருக்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. த.வெ.க. மாநாட்டிற்குச் சென்ற இந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.