கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயதான கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி 34 வயதான தமிழரசி. இந்தத் தம்பதியினருக்கு 13 மற்றும் 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி தமிழரசிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
கணவர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடும்பம் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், தமிழரசி சொந்த ஊரான காட்டுக்கூடலூரில் உள்ள கோபாலகிருஷ்ணனின் பெற்றோர் வீட்டில் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த வீட்டில் கோபாலகிருஷ்ணனின் இரு சகோதரர்களான முருகானந்தமும் பாலகிருஷ்ணனும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த தமிழரசியைப் பயன்படுத்திக்கொண்ட இரு கொழுந்தனார்களும் (முருகானந்தம், பாலகிருஷ்ணன்) அன்னியாகக் கூடப் பார்க்காமல் அவரைப் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசி, இருவர் மீதும் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே சமயம் தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்தச் சூழலில் முன்ஜாமீன் பெற்ற பாலகிருஷ்ணன், நவம்பர் 30-ஆம் தேதி வீட்டிற்கு வந்து, புகார் அளித்ததற்காக தமிழரசியைத் தாக்கியுள்ளார். ஆத்திரம் தீராத அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழரசியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதனைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலகிருஷ்ணனைக் கைது செய்தனர். தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணியை கொழுந்தனார் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us