உத்திர பிரதேச மாநிலத்தின் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சவுத்ரி என்கிற போலா (30). இவர் ஹோலி பண்டிகையின் போது வேறு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை (ஃபர்மான் மற்றும் அவரது நண்பர்) வேனில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்கச் சொல்லி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கோஷமிடச் சொல்லியுள்ளார். ஆனால், அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர் தொடர்ந்து, அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் எனச் சொல்ல வேண்டுமென வற்புறுத்தியுள்ளார். மேலும், அவர்கள் மீது வண்ண பொடிகளைப் பூசவும் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர்கள் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ‘நீங்களே இதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களைக் கடுமையாகத் தாக்குவோம்’ என்று மிரட்டியுள்ளார்.
இது சம்பந்தமான வீடியோ கடந்த 04ஆம் தேதியன்று வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஷாதாபாத் காவல் நிலையத்தில், பிரிவுகள் 196 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சவுத்ரியைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், ‘சவுத்ரி எங்களை ஜெய் ஸ்ரீ ராம் எனச் சொல்லுமாறு வற்புறுத்தினார். அதோடு, எங்கள் மீது வண்ண பொடிகளைப் பூச முயன்றார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இதை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களைக் கடுமையாகத் தாக்குவோம் என்று அச்சுறுத்தினர். இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நீதி வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட சவுத்ரி கூறுகையில், ‘நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அனைவரையும் மதிக்கின்றேன். அவர்களில் பலர் எனக்குச் சகோதரர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. மேலும், இது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகளுக்கு நான் அஞ்சமாட்டேன்.இதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் கோமாதா..." என்று கூறினார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது "பிற மதத்தினரின் நம்பிக்கைகளை அவமதித்தல், அவர்களின் மத உணர்வைப் புண்படுத்துதல் மற்றும் மதத்தின் பேரால் அவர்களுக்குத் தீங்கிழைத்தல்" போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/jai-2026-03-07-20-29-18.jpg)