கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டம், சட்டிகுனி தாலுகாவிற்கு உட்பட்ட துகனூர் ஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான சரணப்பா. கூலித்தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் 5 வயதில் சான்வி என்ற மகளும், 3 வயதில் ஹேமந்த், பார்கவ்என்ற இரு மகன்களும் உள்ளனர். கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து, தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சரணப்பா வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், திடீரென சரணப்பாவிற்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவரைக் கண்காணிக்கத் தொடங்கிய சரணப்பா, ஒரு கட்டத்தில் மனைவியிடமே இது குறித்து கேட்க ஆரம்பித்துள்ளார். மேலும், "உனக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது? அந்த ஆண் யார்?" என்று கேள்வி கேட்டு, தகராறு செய்துள்ளார். இப்படித் தினந்தோறும் மனைவியை அடித்து, தொடர்பில் இருக்கும் அந்த நபர் யார் என்று கேட்டு வந்த சரணப்பாவிற்கு, தனது குழந்தைகளின் மீதே சந்தேகம் வந்திருக்கிறது.
"இந்த மூன்று குழந்தைகளும் யாருக்கு பிறந்தது? உண்மையைச் சொல், எனக்குதான் இவர்கள் பிறந்தார்களா?" என்று சந்தேகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அவரது மனைவி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் அங்கேயே இருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதி, சரணப்பா தனது மாமியார் வீட்டிற்கு சென்று, தனது மனைவியிடம், "இனி நான் அப்படி எல்லாம் நடந்துகொள்ள மாட்டேன், என்னை மன்னித்துவிடு," என்று சமாதானம் செய்துள்ளார். அதனை நம்பிய அவரது மனைவி, தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, துகனூர் ஹட்டியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். இங்கு வந்த ஓரிரு நாட்கள் அமைதியாக இருந்த சரணப்பா, மீண்டும் தனது பழைய முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக, மனைவியிடம் மீண்டும், "இந்தக் குழந்தைகள் யாருக்கு பிறந்தவை?" என்று கேட்டு, தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கைகலப்பும் நடந்திருக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 24-ஆம் தேதி இரவும், இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில், எழுந்த அவரது மனைவி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றிருக்கிறார். அந்த நேரத்தில், திடீரென கோடரியுடன் வீட்டிற்குள் வந்த சரணப்பா, தூங்கிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் கொடூரமாக வெட்டியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததைப் பார்த்து, சரணப்பா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சான்வி மற்றும் பார்கவ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தனர். ஹேமந்த் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில், ஹேமந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியே சென்றிருந்த சரணப்பாவின் மனைவி, வீட்டிற்குத் திரும்பி வந்து, இரு குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த யாதகிரி புறநகர் காவலர்கள், இரு குழந்தைகளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தனிப்படை அமைத்து, தப்பியோடிய சரணப்பாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார், "சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருக்கும் சரணப்பாவைத் தேடி வருகிறோம். விரைவில் அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவோம். மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினரின் வாக்குமூலம் பெறப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்," என்றார்.
மனைவியின் மீது சந்தேகப்பட்டு, தனக்குப் பிறந்த குழந்தைகளையே கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தையின் செயல், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.