தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசல் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் மொபைல் போன் விற்பனை செய்யும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இப்பகுதியில் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளியன்று இரவு, பெரிய பள்ளிவாசல் தெற்கு புது தெருவில் அடுத்தடுத்து நான்கு செல்போன் கடைகளில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

Advertisment

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபாகம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு இளைஞர் மொபைல் கடை முன்பு படுத்துத் தூங்குவது போல நடித்து, கடைகளின் பூட்டை உடைத்து மொபைல் போன்கள், உதிரிபாகங்கள் மற்றும் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

Advertisment

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முக்கிய இடங்களான தென்பாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள சின்னத்துரை & கோ சந்திப்பு, ஜின் பேக்டரி ரோடு சந்திப்பு, கண்ணா சில்க் அருகே மற்றும் WGC ரோடு அழகர் ஜூவல்லரி சந்திப்பு ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 360 டிகிரி கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 2 ரோந்து வாகனங்கள், பிற முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, இரவு நேரங்களிலும் துல்லியமாகப் பார்க்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய "ட்ரோன்" கேமராக்கள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 19 ஆம் தேதி துவக்கி வைத்தார். அதற்கு அடுத்த நாள் இரவே கொள்ளையன் நகரின் மையப் பகுதியில் உள்ள மொபைல் கடைகளில் நூதன முறையில் கைவரிசை காட்டிச் சென்றிருப்பது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

விடிய விடிய காவல்காத்த போலீஸ்.. விடிந்ததும் திருடுபோன பொருள்! | Tuticorin | Police | Nakkheeran #nakkheeran #tuticorin #police

Posted by Nakkheeran on Monday, October 27, 2025