Man presumed lost returns home after 29 years due to SIR work in west bengal
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்தாண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது.
அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர்களாக உள்ளவர்களிடம் இருந்து பெற்ற எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வந்தது. 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஒவ்வொரு மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை குறிப்பிட்ட தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒரு நபர், எஸ்.ஐ.ஆர் பணியால் 29 வருடங்களுக்குப் பிறகு தனது ஊருக்கு உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கட்டெளலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷெரீப் அகமது (79). இவர் தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, கடந்த 1997ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். யாரிடம் சொல்லாமல் அங்கு குடியேறியதால் உறவினர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஷெரீப் அகமது இறந்துவிட்டதாகக் கருதியுள்ளனர்.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்காக ஆவணங்களைச் சேகரிப்பதற்காக ஷெரீப் அகமது கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரை கண்ட உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மருமகன் வசீம் அகமது கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக அவரைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். மேற்கு வங்கத்திற்குச் சென்று அவரது இரண்டாவது மனைவி வழங்கிய முகவரியைப் பின்தொடர்ந்தோம், ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாததால், அவரது நான்கு மகள்களும் குடும்பத்தினரும் அவர் உயிருடன் இல்லை என்று கருதினர்’ என்று கூறினார்.
Follow Us