Man massacre his sister in law and her lover for illegal affairs
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் ஹஸ்வா கிராமத்தைச் சேர்ந்தவர் தில்டார் குரேஷி (35). இவரது அண்டை வீட்டில் ஃபைசான் (45) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது மைத்துனி லைலா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஃபைசான் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குரேஷி சந்தேகமடைந்துள்ளார். இந்த சந்தேகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் ஆபாசமாக இருப்பதை குரேஷி பலமுறை பார்த்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதியன்று குரேஷி, ஃபைசானை தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இந்த உறவு குறித்து குரேஷி, ஃபைசானிடம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குரேஷி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஃபைசானின் வயிற்றில் குத்தியுள்ளார். அதில் இருந்து ஃபைசான் தப்பி ஓடி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் குரேஷி, ஃபைசானின் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே அவரைக் கொலை செய்துள்ளார்.
இதன் பிறகு வீட்டிற்கு வந்த குரேஷி, தனது மைத்துனி லைலாவையும் கத்தியால் பலமுறை குத்தித்தியுள்ளார். அப்போது அவரது சகோதரி மன்னு (23) தடுக்க முயன்ற போது அவரையும் குரேஷி தாக்கியுள்ளார். இதில் மன்னு படுகாயமடைந்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, குடும்ப உறுப்பினர்களும் அண்டை வீட்டார்களும் விரைந்து வந்து, காயமடைந்த இரண்டு பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லைலா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மன்னு ஆபத்தான நிலையில் கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் (எல்எல்ஆர்) மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, குரேஷி தரியாவோன் காவல் நிலையத்தில் சரணடைந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஃபதேபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனூப் குமார் சிங் சம்பவம் குறித்து கூறுகையில், ‘ஆரம்பகட்ட விசாரணையில், குரேஷி தனது மைத்துனியுடன் ஃபைசானுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். இதற்கு, தனது சகோதரியும் உடந்தையாக இருந்ததாக, அவர் நம்பியதாகவும் தெரியவந்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல், இதற்கு முன்பு பலமுறை அவர்கள் இருவரையும் ஆபாசமான நிலையில் பார்த்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த குரேஷி, இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று கூறினார். இதனிடையே, உயிரிழந்த லைலாவிற்கு 2019-ல் திருமணம் ஆன நிலையில், அவருக்கு மூன்று இளம் மகள்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குரேஷி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us