கோவை மாவட்டம், பேரூர் சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் என்கிற அறிவொளி ராஜன். 60 வயதான அறிவொளி ராஜன், நேற்று(5.8.2025) இரவு தன்னை யாரோ துரத்துவதாகக் கூறி, கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர், அவர் காவல் நிலையக் கட்டடத்தில் உள்ள முதல் மாடிக்குச் சென்று, அங்கிருந்த கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறையில் சுமார் 11 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த காவலர்கள், கிரைம் பிரிவு உதவி ஆய்வாளரின் அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அறையில் யாரோ இருப்பதும், உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கதவை உடைத்து காவலர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் உள்ள மின்விசிறியில் தனது வேட்டியில் அறிவொளி ராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “காவலர் செந்தில்குமார் பணியில் இருந்தபோது, காவல் நிலையத்திற்கு வந்த அறிவொளி ராஜன் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். காவலரிடம் பேசிய அவர், பின்னர் அவருக்குத் தெரியாமல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டது யாருக்கும் தெரியவில்லை.
காலையில் காவலர்கள் பணிக்கு வந்தபோதுதான், அறைக்குள் யாரோ இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அந்த நபர் வேட்டியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த இருக்கிறார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உயிரிழந்த நபர், பேருந்தில் வந்து போத்தீஸ் கார்னர் பகுதியில் இறங்குவது தெரிகிறது. 11.19 மணிக்கு காவல் நிலையத்திற்கு வருகிறார்.
இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த டைரியைப் பார்த்தபோது, அவர் ராஜன் என்பதும், சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ராஜன் கடந்த 10 நாட்களாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்துவந்தது, அவரது குடும்பத்தினரிடம் பேசியதிலிருந்து தெரியவந்தது. நீதிபதி விசாரணைக்குப் பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.சம்பந்தப்பட்ட காவலர்கள், பணியின்போது அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதை லாக்அப் டெத் எனச் சொல்ல முடியாது; இது காவல் நிலையத்தில் நடந்த தற்கொலை. இறந்தவர் மீது வழக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை இனிமேல் பார்க்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, இரவு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலக அறையைப் பூட்டாமல் இருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரபடுத்துத்தப்பட்டுள்ளது.