தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான மகேந்திர ரெட்டி.  அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயதான ஸ்வாதி. இருவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டு, பின் காதலரகளாக மாறியிருக்கிறது.  முதலில் இவர்களது காதலுக்கு ஸ்வாதியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 20  ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. முதல் ஒரு மாதம் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால், அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

Advertisment

அதன் காரணமாக, விகாராபாத் காவல் நிலையத்தில் ஸ்வாதி, தனது கணவர் தினமும் அடிப்பதாகவும் புகார் அளித்தார். பின்னர், ஊர் முக்கியஸ்தர்கள் சமாதானம் செய்து வைத்து, புகார் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் கர்ப்பிணியாக இருந்த ஸ்வாதியின் கருவும் கலைந்திருக்கிறது.

இந்தச் சூழலில், இருவரும் விகாராபாத்திலிருந்து ஐதராபாத், ஈஸ்ட் பாலாஜி ஹில்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு மகேந்தர் ரெட்டி டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே, ஸ்வாதி ஒரு கால் சென்டர் நிறுவனத்தில் மூன்று மாதங்கள் வேலை பார்த்து வந்தார். ஆனால், அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மகேந்தர் ரெட்டி, ஸ்வாதியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி, வீட்டிலேயே இருக்க வைத்துள்ளார்

இந்நிலையில், ஸ்வாதி மீண்டும் கருவுற்று ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும், வீட்டில் சண்டை மட்டும் ஓய்ந்த பாடியில்லை. நாள்தோறும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 22 அன்று, மருத்துவப் பரிசோதனை முடித்துவிட்டு, தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல உள்ளதாக ஸ்வாதி கூறியிருந்தார். ஆனால், அதற்கு மகேந்தர் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்திருகிறார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நள்ளிரவு வரை தொடர்ந்து இருக்கிறது. 

இதையடுத்து, மறுநாள், அதாவது ஆகஸ்ட் 23 அதிகாலையில், வீட்டை விட்டு வெளியேறிய மகேந்தர் ரெட்டி, கடைக்குச் சென்று ஒரு மரம் அறுக்கும் பிளேடை வாங்கிக்கொண்டு, மாலை வீட்டிற்கு வந்தார். மறுபடியும் மனைவியுடன் தகராறு செய்த மகேந்தர் ரெட்டி, ஸ்வாதியை அடித்துக் கொலை செய்தார். பின்னர், உடலை மறைப்பதற்காக, அவர் கொண்டு வந்த மரமறுக்கும் பிளேட் மூலம் ஸ்வாதியின் கைகள், தலை, மற்றும் கால்களை உடலில் இருந்து துண்டித்து, தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்தார். பின்னர் ஸ்வாதியின் உடலைப் பல துண்டுகளாக வெட்டிய மகேந்தர், சில பாகங்களை மூசி ஆற்றில் வீசினார். மேலும், சில உடல் பாகங்களை வீட்டிலேயே வைத்திருந்தார். யாருக்கும் சந்தேகம் வராதவாறு, வெளியே செல்லும்போது ஒவ்வொரு உடல் பாகத்தையும் எடுத்துச் சென்று அப்புறப்படுத்தி வந்திருக்கிறார்.

Advertisment

இதனிடையே, ஸ்வாதியைக் காணவில்லை என்று அவரது பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் மகேந்தர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில், மகேந்தரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டைச் சோதனையிட்டபோது, ஸ்வாதியின் மீதமுள்ள உடல் பாகங்களைக் கண்டுபிடித்தனர். மகேந்தர் ரெட்டியை பிடித்து விசாரித்தபோது, அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மெடிப்பள்ளி காவல்துறையினர் அவரைக் கைது செய்து, வீட்டில் இருந்த மரமறுக்கும் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் மகேந்தர் ரெட்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர்,  அவரை தற்போது  போலீஸ் கஷ்டடியில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட காவல் துணை ஆணையர் பத்மஜா கூறுகையில், “மகேந்தர் ரெட்டியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மகேந்தரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மூசி ஆற்றில் மீட்புப் படையினர் உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த உடல் பாகங்களும் மீட்கப்படவில்லை. குடும்பத் தகராறு காரணமாக மகேந்தர் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று தெரிவித்தார்.  இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த ஆந்திர மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது.