கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள், தசரா விழாவில் பங்கேற்க மைசூருக்கு வந்திருந்தனர். தசரா விழாவையொட்டி, பலூன்கள், பொம்மைகள் மற்றும் சிறு பொருட்கள் விற்பனை செய்வதற்காக அவர்கள் வந்திருந்தனர். அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அக்டோபர் 8 அன்று மைசூரு சாமுண்டி மலையில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தையொட்டி, பெற்றோருடன் பலூன் விற்பனை செய்தார். பின்னர், அனைத்து விற்பனைகளையும் முடித்துக்கொண்டு, சிறுமி மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட விழாவிற்கு வந்த 50 பழங்குடியினர் குடும்பங்களும், அரண்மனை அருகே உள்ள மைதானத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது, அதிகாலையில் திடீரென மழை பெய்தபோது, அனைவரும் எழுந்தனர். ஆனால், அப்போது அருகே படுத்திருந்த 10 வயது சிறுமி மாயமாகியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக நசர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியைத் தீவிரமாகத் தேடினர். அப்போது, அதிகாலை 6:30 மணியளவில், அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குழியில், சிறுமி அரைகுறை ஆடைகளுடன் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

Advertisment

உடனடியாக விசாரணையைத் தொடங்கிய மைசூர் காவல்துறை, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. அதில், சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் சிறுமி படுத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றது தெரியவந்தது. பின்னர், அவர் குறித்து விசாரித்தபோது, அந்த நபர் சித்தலிங்கபுரா பகுதியைச் சேர்ந்த 25 வயது கார்த்திக் என்பது தெரியவந்தது. அதன்பிறகு, காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கார்த்திக் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகாலில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது, அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். பின்னர், அவரை மீட்டு, மைசூர் கே.ஆர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார்.

Advertisment

சம்பவத்தன்று, சிறுமி மற்றும் அவரது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்திற்குள் நுழைந்த கார்த்திக், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி,  தூக்கிச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த புதருக்குள் வைத்து, சிறுமியின் ஆடைகளைக் கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன்,  கத்தியை எடுத்து, சிறுமியின் இடுப்புக்குக் கீழ் 18 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் தப்பிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து பேசிய காவல் அதிகாரி, "குற்றவாளி கார்த்திக் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு, கார்த்திக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் மீது வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

10 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்தி, வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற சம்பவம், மைசூரில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.