மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிஜோன் மண்டல். இவரது மனைவி, 27 வயதுடைய மந்திரா மண்டல். இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். பிஜோன் மொண்டல், தனது குடும்பத்துடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இதனிடையே, பிஜோனும், சுமன் மண்டல் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவரும் பெங்களூரில் பிஜோனுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இந்தச் சூழலில், பிஜோனுக்கும், அவரது மனைவி மந்திராவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மந்திரா தனது கணவர் பிஜோனை விட்டுப் பிரிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு பெங்களூரில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இதைத் தொடர்ந்து, பெங்களூரில் வேலை பார்த்து வந்த பிஜோனுக்கும் அவரது நண்பர் சுமனுக்கும் அந்தமானில் வேலை கிடைத்தது. அதன் காரணமாக, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றனர். 

Advertisment

இந்த நிலையில், சுமன் மட்டும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென பெங்களூருக்கு திரும்பியிருக்கிறார். பெங்களூர் திரும்பிய சுமன், ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாலை, மேற்கு பெங்களூரில் வசிக்கும் தனது நண்பரின் மனைவி மந்திராவைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது ஆறு வயது மகன் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததால், மந்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் வீட்டில் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, சுமன் தனது நண்பரின் மனைவியான மந்திராவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மந்திரா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சுமன், வீட்டில் உள்ள மற்றொரு அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இதுகுறித்து ஹெப்பகோடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மந்திரா மற்றும் சுமன் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணத்திற்காக சுமன் தனது நண்பரின் மனைவியின் வீட்டிற்கு சென்றார்?, எதற்காக அவரைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், காவல்துறை தரப்பில், சுமனுக்கும் மந்திராவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக இருவரும் சந்தித்தபோது தகராறு ஏற்பட்டு, மந்திராவைக் கொலை செய்துவிட்டு, பயத்தில் சுமன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் முழு விவரம் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.