இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனைக் கொன்ற கணவர்; நாடகமாடிய மனைவி

103

குஜராத் மாநிலம் சூரத் அருகே கம்பாசாலா சாலையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தலை நசுங்கிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இந்த நபர் சாலை விபத்தில்  உயிரிழந்திருக்கலாம் என்று கருதினர். மேலும், சடலத்துக்கு அருகில் இருந்த செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் கடைசியாக பேசிய எண்ணுக்கு போன் செய்து பார்த்தனர்.

அந்த தொலைபேசி எண் அதே பகுதியைச் சேர்ந்த மீனாதேவியுடையது என்றும், அந்த சடலம் அவரது கணவர் சிவ்குமார் மிஸ்ரா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், உயிரிழந்திருப்பது தனது கணவர் தான் என்று மீனாதேவி நேரில் பார்த்து உறுதியும் செய்தார். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிவகுமார் மிஸ்ராவின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு, குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்கு செய்தனர்.

 இதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜூலை 13 ஆம் தேதி இரவு சிவகுமார் மிஸ்ராவும், அவரது நண்பர் தேவிபிரசாத் பால் என்பவரும் ஒன்றாக பைக்கில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்பிறகு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவியில் இருவரும் லாரியில் பெட்ரோல் போடும் காட்சி பதிவாகியிருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரித்து வந்துள்ளனர். 

இந்த சூழலில்  கணவரின் இன்சூரன்ஸ் பணம் குறித்து மனைவி மீனாதேவி விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். கணவர் இறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் மனைவி மீனாதேவி இன்சூரன்ஸ் பணம் குறித்து கேட்கத் தொடங்கியது போலீசாருக்கு  சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அதன்பிறகு, சிவகுமார் மிஸ்ராவின் மனைவி மீனாதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த மீனாதேவி, போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளைத் தெரிவித்திருக்கிறார்.

போக்குவரத்து தொழிலாளராக இருந்து வந்த சிவகுமார் மிஸ்ரா, முதலில் ஒரு லாரி வாங்கியிருக்கிறார். அதன்பிறகு தொழிலைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையில், கடன் வாங்கி மற்றொரு லாரியையும் வாங்கியுள்ளார். ஆனால், அவர் நினைத்த மாதிரி தொழிலில் லாபம் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிவகுமார் மிஸ்ராவை கடன் கொடுத்தவர்கள் எல்லாம் நெருக்க ஆரம்பித்தனர். இதனால் செய்வதறியாமல் தவித்து வந்த அவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றைப் பார்த்துள்ளார். அதில், ஒருவர் இன்சூரன்ஸ் தொகைக்காக கொல்லப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனைப் பார்த்த அவருக்கு, நாம் இறந்துவிட்டால் இன்சூரன்ஸ் பணம் வரும், அதனை வைத்து கடனை அடைத்துவிடலாம் என்று யோசனை வந்ததுள்ளது. ஆனால், தான் சாகக் கூடாது என்று எண்ணிய அவர், மனைவியுடன் சேர்ந்து பலே திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.

அதன்படி, தனக்குப் பதிலாக வேறு ஒருவரைக் கொலை செய்து, அது தான் தான் என்று நிரூபித்துவிட்டால், இன்சூரன்ஸ் பணம் கைக்கு வந்துவிடும். அதன்பிறகு கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என்று தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்க, தனது நண்பர் சிலருடன் சேர்ந்து திட்டத்தை சிவகுமார் மிஸ்ரா செயல்படுத்தியிருக்கிறார்.

அதன்படி தனது நெருங்கிய நண்பரான தேவிபிரசாத் பாலை அழைத்து,  அவரை அதிகளவில் மதுகுடிக்க வைத்திருக்கிறார். தேவிபிரசாத் பாலுவும், தனது நண்பர் தானே என்று அவர் கொடுத்ததை எல்லாம் குடித்துவிட்டு, அதீத போதையில் மயங்கியுள்ளார். அதன்பிறகு சிவ்குமார் தனது லாரியில்  தேவிபிரசாத் பாலை தூக்கிப் போட்டுக்கொண்டு சம்பவம் நடைபெற்ற சாலைக்கு சென்றுள்ளார். பின்னர், அதீத போதையில் இருந்த தேவிபிரசாத் பாலை சாலையில் படுக்க வைத்து, அவரது முகத்தில் லாரியை ஏற்றி, துடிக்கத் துடிக்க கொலை செய்திருக்கிறார். அதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தேவிபிரசாத் பால் உயிரிழந்துள்ளார்.  அதன்பிறகு சிவகுமார் மிஸ்ரா, தனது உடையை அவருக்கு அணிவித்துவிட்டு, செல்போனில் இருந்த அவரது சிம் கார்டை எடுத்துவிட்டு, தனது சிம் கார்டை வைத்துவிட்டு, அங்கிருந்து புனேவில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார், புனே சென்று அங்கு தலைமறைவாக இருந்த சிவகுமார் மிஸ்ராவைக் கைது செய்தனர். பின்னர் சூரத்துக்கு அழைத்து வந்த போலீசார், சம்பவத்தில் உதவிய மனைவி மீனாதேவி, மற்றும் சிவ்குமார் மிஸ்ராவின் நண்பர்என மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது நண்பரைக் கொலை செய்ததை சிவகுமார் மிஸ்ரா ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பரைக் கொன்று நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat Insurance police
இதையும் படியுங்கள்
Subscribe