குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு நபர், அழுகிய நிலையில் நீல நிற டிரம்மில் சடலமாக கிடந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கர் பாஸ் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆதர்ஷ் காலணியில்  தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டு உரிமையாளரான வயதான பெண், முதல் மாடிக்கு ஏதோ வேலைக்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த நீல நிற டிரம்மில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வீசியுள்ளது.

Advertisment

இதில் சந்தேகமடைந்த அந்த பெண், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த நீல நிற டிரம்மை சோதனை செய்தனர். அப்போது அந்த டிரம்மில் அழுகிய நிலையில் ஹன்ஸ்ராஜின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஹன்ஸ்ராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்ததில் இருந்து ஹன்ஸ்ராஜின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் உடல் டிரம்மின் எத்தனை நாள் கிடந்தது? அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், கணவனை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்து தனது ஆண் நண்பருடன் உல்லாசப் பயணம் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், இந்த வழக்கு இணையத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது. நீல டிரம்ஸின் பயன்பாட்டை கேலி செய்யும் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தன. மேலும், நீல நிற டிரம்களை வாங்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்க வேண்டும் உத்தரப் பிரதேச வணிகர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment