மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜவாசியா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 71 வயதுடைய சோஹன்லால் ஜெயின் மற்றும் 51 வயதுடைய அம்பலால் பிரஜாபதி. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில், சோஹன்லால் ஜெயினுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் போராடி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சோஹன்லால் ஜெயினின் உடல் நிலை மோசமடைந்திருக்கிறது.

நாம் விரைவில் இறந்துவிடுவோம் என்பதை உணர்ந்த அவர், ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “அழுகையோ, மௌனமோ வேண்டாம்; மகிழ்ச்சியை மட்டும் வெளிப்படுத்துங்கள். நான் இந்த உலகை விட்டுச் செல்லும்போது, எனது இறுதி ஊர்வலத்தில் சவத்தின் முன் நின்று, எனது உயிர் நண்பர் அம்பலால் நடனமாடி அனுப்பி வைக்க வேண்டும். மேலும், நான் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை ஏற்று, அம்பலால் பிரஜாபதியும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சோஹன்லால் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார். தனது உயிர் நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், சோஹன்லாலின் சவத்திற்கு முன்பு நின்று, கண்களில் நீர் வழிய, அம்பலால் பிரஜாபதி நடனமாடினார். நெருங்கிய நண்பரின் ஆசையை நிறைவேற்றிய அம்பலால் பிரஜாபதியின் செயல் அங்கிருந்தவர்களையும் கலங்கச் செய்தது.

இதுகுறித்துப் பேசிய அம்பலால் பிரஜாபதி, “நான் என் நண்பருக்கு அவரது இறுதிப் பயணத்தில் நடனமாடுவேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன், அதைச் செய்தேன். அவர் எனக்கு வெறும் நண்பர் மட்டுமல்ல; என் நிழலைப் போலவே இருந்தார்,” என்று கண்ணீருடன் நண்பரைப் பிரிந்த ஏக்கத்தை வெளிப்படுத்தினார். 

Advertisment

அதன்பிறகு, சோஹன்லாலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இதுகுறித்துப் பேசிய அவரது குடும்பத்தினர், “நாங்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறோம். ஆனால், அம்பலால் பிரஜாபதி செய்த மரியாதை, சோஹன்லாலுக்கு நிச்சயம் அமைதியைக் கொடுத்து, ஆத்மாவைச் சாந்தி அடையச் செய்யும்,” என்று உருக்கமாகத் தெரிவித்திருக்கின்றனர்.