கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், கணவனை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்து தனது ஆண் நண்பருடன் உல்லாசப் பயணம் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. வணிக கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சவுரப் ராஜ்புட்டின் மனைவியான முஸ்கானுக்கும் சாஹில் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை சவுரப் கண்டித்ததால், தனது ஆண் நண்பர் சாஹிலுடன் இணைந்து சவுரப்பை 15 துண்டுகளாக வெட்டி முஸ்கான் கொலை செய்து நீல டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை கொட்டி மூடியுள்ளார்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், இந்த வழக்கு இணையத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது. நீல டிரம்ஸின் பயன்பாட்டை கேலி செய்யும் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வந்தன. மேலும், நீல நிற டிரம்களை வாங்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டை கொடுக்க வேண்டும் உத்தரப் பிரதேச வணிகர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பஞ்சாப்பின் லூதியான பகுதியில் நீல நிற டிரம்மிற்குள் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூதியானா பகுதியில் துர்நாற்றம் வீசிய தொடங்கியதை அடுத்து உள்ளூர்வாசிகள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நீல நிற டிரம் ஒன்றில் ஒரு ஆணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட அந்த உடலின் கழுத்து மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் கண்டெடுக்கப்பட்ட டிரம் புத்தம் புதியதாக தெரிவதால், லூதியானாவில் உள்ள 42 டிரம் உற்பத்தி நிலையங்களின் பட்டியலை தொகுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது திட்டமிட்ட கொலை என்றும், கொலைக்கு முன்பு டிரம் புதிதாக வாங்கப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என குற்றம் நடந்த இடத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.