தெலுங்கானா மாநிலம் கொருட்லா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் பெண்கள் பேருந்திற்காகக் காத்திருந்தனர். கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில், பெண்கள் அதிகமாகக் குழுமியிருந்தனர். அந்த பேருந்து நிலையத்தில் பெண்களுக்கென தனி இருக்கைகள் உண்டு. இங்குப் பெண்கள் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில், அங்கு புர்கா அணிந்த ஒரு பெண் வந்தார்.
அந்த பெண்ணின் நடை, உடை மற்றும் பாவனைகள் பெண் போன்று இல்லாததால் அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரிடத்தில் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவரின் கால்கள் நடுங்கவே, இவர்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து சுற்றியிருந்தவர்கள் சரமாரியாக அவரிடம் கேள்விகளை அடுக்கினர்.
இதையடுத்து, அவரது முகத்தில் இருந்த புர்காவை விலக்கியதும், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். காரணம், புர்கா அணிந்து வந்திருந்தது ஒரு ஆண் என்பது தெரியவந்தது. ஏன் இப்படிச் செய்தாய்? என் சுற்றியிருந்தவர்கள் கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த நபரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினரின் விசாரணையிலும் அவர் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதையடுத்து, இவர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக இவ்வாறு மாறுவேடத்தில் வந்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இதனிடையே, அவர் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதற்காக இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அதாவது, தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் செய்வதைப்போல, தெலுங்கானாவில் பெண்களுக்கு மகாலட்சுமி என்ற திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டம் உள்ளது. அதனால், கட்டணமில்லாமல் இலவச பயணம் மேற்கொள்ளவே இந்த மாறுவேடத்தில் வந்துள்ளதாகவும் மக்கள் அந்த நபரை விமர்சித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/burgaga-2026-02-19-19-25-43.jpg)