கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான காளிதாஸ். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்து வரும் காளிதாஸுக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், பின்னர் அவர்களது நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசுவதும், தனிமையில் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அப்போது, பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் காளிதாஸ் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதைக்கேட்டு மயங்கிய அந்த மாணவியிடம், காளிதாஸ் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, 12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதைத் தனது இன்ஸ்டாகிராம் காதலனிடம் தெரிவித்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார். அப்போதுதான் காளிதாஸின் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது.
"என்னால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது" என்று மிரட்டிய காளிதாஸ், மாணவியையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, நடந்தவற்றைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், உடனடியாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, காளிதாஸைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் காளிதாஸ் உண்மையை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், பாடம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்ப்பது போன்றவற்றுக்கு செல்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதே சமயம், தங்கள் பிள்ளைகள் செல்போனில் எதைப் பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணித்தால் தான், வளரும் இளம்பருவத்தினர் தவறான வழிகளில் செல்லாமல், ஆரோக்கியமான இளம் தலைமுறையினராக உருவாக்கப்பட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.