Man arrested in Dubai for defrauding people of Rs 1000 crore
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஷீத் நசீம். இவர் லக்னோவில் ஷைன் சிட்டி குழுமம் என்ற பெயரில் வீடு மனை விற்பனை தொழில் உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். இந்த நிலையில், நிலத்தில் முதலீடு மற்றும் அதிக வட்டி போன்ற காரணங்களைக் காட்டி பொதுமக்களிடம் இருந்து 800 கோடி முதல் 1000 கோடி வரை பணத்தை வசூலித்துக்கொண்டு, பின்பு அதைத் திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, இவர் மீது உத்திர பிரதேச காவல்துறையால் 554 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது சம்பந்தமாக லக்னோ பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மதம் அவர் தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த டிசம்பரில் நசீம் மற்றும் அவரது நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.127.98 கோடி மதிப்பிலான சொத்துக்களை நீதிமன்றம் முடக்கியது. அதோடு மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நசீம் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வந்தன.
இதனிடையே, மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட அவர், முதலில் நேபாளத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து தப்பித்து, துபாய்க்குச் சென்றார். தற்போது துபாயில் உள்ள அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் அவர் மீதான வழக்குகள், கைது ஆணை உள்ளிட்ட விவரங்கள் அந்நாட்டு அரசுக்குக் கடந்த ஜனவரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அமீரக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணைக்காக அவர் விரைவில் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us