மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்ட டாஸ்மாக் ஊழியரிடம் மதுபிர்யர் ஒருவர் தகாறு செய்யும் வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் மது பாட்டில்களுக்கு நிர்ணய விலையைவிட ரூ.10 கூடுதலாக வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்கள் மீது மதுபிரியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி பேசி வருகின்றன. ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள், புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி சமாளித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்தக் கடையில் மதிய நேரத்தில் கொண்டிகுளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்கச் சென்றுள்ளார். அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட பத்து ரூபாய் கூடுதலாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, பாட்டிலில் உள்ள விலையைவிட ஏன் பத்து ரூபாய் அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஏற்கனவே மது போதையில் இருந்த அவர், பத்து ரூபாய் கொடுக்க முடியாது என்றும், முன்பு வாங்கிய கூடுதல் பத்து ரூபாயைத் திருப்பித் தருமாறும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியபடி, கடைக்கு வெளியே கிடந்த காலி மது பாட்டில்களை எடுத்து மதுபான கடை மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மது வாங்க வந்த மற்ற மதுபிரியர்களிடம் கூடுதலாக பத்து ரூபாய் யாரும் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீரமணி இடுப்பில் கத்தி வைத்திருந்ததால், மற்றவர்கள் அச்சப்பட்டு அவரை அணுகவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார், தாக்குதல் நடத்திய வீரமணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதைத் தடுக்க, டாஸ்மாக் கடைகளில் கணினிமயமாக்கப்பட்ட திட்டம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அரசு அறிமுகப்படுத்திருக்கிறது. மேலும், இந்த புகார் தொடர்பாக சில டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றனர். ஆனாலும், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணமே இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கருத்தில் கொண்டு முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..