சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10ம் தேதி அதிகாலை நேரத்தில்.. அடையாறு மேம்பாலம் அருகே அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தூய்மைப் பணியில் இருந்த அந்த பெண்ணை நோட்டமிட்டு.. அங்கும் இங்குமாய் சுற்றிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், அந்த பெண் இருக்கும் இடத்திற்கு வந்த இளைஞர்.. தனது இருசக்கர வாகனத்தை தூய்மைப்படுத்தி வந்த இடத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில்.. திடீரென தனது பேண்ட் ஜிப்பை கழட்டி.. அப்பெண்ணிடம் ஆபாச சைகை மூலம் பாலியல் அதுமீறலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்.. அவர் கையில் வைத்திருந்த துடைப்பத்தால் அவரை அடித்து விரட்டினார். அந்நேரத்தில், அந்த கொடூர இளைஞர் பயந்து அங்கிருந்து இரு சக்கரத்தை எடுத்து கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் மற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் அங்கு கார் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். சென்னையில் அதிகாலை நேரத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் சக தூய்மைப் பணியாளர் இடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பெண் தூய்மைப் பணியாளரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை உடனடியாக காவல் துறை கைது செய்து வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் விசாரணையில் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை வைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவர் யார்? ஏன் அந்த நேரத்தில் அங்கு வந்தார்? அவர் தொடர்ச்சியாக இதுபோன்ற விஷயங்களை செய்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவரா? என்பது குறித்து துப்பு துலங்கினர். அதில் பெண் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பச்சு சாய் தேஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். 25 வயதான அந்த இளைஞர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பெண் தூய்மைப் பணியாளரிடம் மர்ம நபர் தவறாக நடந்து கொள்ள முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us