மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பாக் (ஐடி விங்) தலைவர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் ஐ-பாக் அலுவலகத்தில் பண மோசடி புகாரின் பேரில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 8ஆம் தேதி சோதனை நடத்தினர்.

Advertisment

கொல்கத்தாவில் நடைபெற்று இந்த சோதனை பற்றிய செய்தி கட்சியினருக்கு தெரியவர, உடனடியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அலுவலகத்திற்கு முன்பு கூடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று அலுவலகத்திற்கு முன்பு வந்தார். அங்கு வந்த அவர், அமலாக்கத்துறை சோதனை நடத்திக் கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்துக்குச் சென்று சில ஆவணங்களை எடுத்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், அதிகாரிகள் சோதனை நடத்திய போது தனது அதிகாரத்தையும், அரசியலமைப்பையும் தவறாகப் பயன்படுத்தி முதல்வர் மம்தா பானர்ஜி அலுவலகத்துக்குள் உள்ளே வந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார் என்றும் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டு தங்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்றும் மம்தா பானர்ஜி மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கடந்த 10ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ்கள் என்னிடம் உள்ளது. நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள மூத்த பாஜக தலைவர்களைச் சென்றடைகிறது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால், அதை நான் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க முடியும். நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த பணத்தை சுவேந்து அதிகாரி பயன்படுத்தி, அமித் ஷாவிற்கு அனுப்பினார். நான் பொதுவாக எதிர்வினையாற்றுவதில்லை, ஆனால் யாராவது என்னைத் தூண்டினால், நான் அவர்களை விட்டு வைக்கமாட்டேன். நான் வகிக்கும் பதவிக்கு மரியாதை அளித்து அமைதியாக இருக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பொறுத்துக்கொள்வேன். ஒரு லட்சுமணக் கோடு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னை அதிகமாக அழுத்தம் கொடுக்காதீர்கள். நான் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன். இந்த முழு நாடும் அதிர்ச்சியடையும். நான் தேசிய நலனுக்காகப் பேசுவதில்லை. நான் வாயைத் திறந்தால், உலகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பு ஏற்படும்” என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார். 

Advertisment