மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பாக் (ஐடி விங்) தலைவர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில் பண மோசடி புகாரின் பேரில் நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெற்று இந்த சோதனை பற்றிய செய்தி கட்சியினருக்கு தெரியவர, உடனடியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அலுவலகத்திற்கு முன்பு கூடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று அலுவலகத்திற்கு முன்பு வந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “வேட்பாளர் பட்டியல்கள், கட்சி உத்தி, திட்டங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை சேகரிக்க அமலாக்கத்துறை எங்கள் அலுவலகத்திற்கு வந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத மோசமான மற்றும் குறும்புக்கார உள்துறை அமைச்சர் இதற்குப் பின்னால் இருக்கிறார். அமித் ஷா எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை சேகரிக்க விரும்புகிறார்.
அவர்கள் எனது கட்சி ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்கள். அங்கு பாதுகாப்புக்காக காவலர்கள் இல்லை. ஒரு பக்கம் பெயர்கள் வாக்காளர்களை நீக்கும் எஸ்.ஐ.ஆர் உள்ளது மறுபுறம், அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல்கள், கட்சி உத்தி மற்றும் கட்சித் திட்டங்களை சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் நான் சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்தால் விளைவு என்னவாகும்?” என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இன்று மாலை 4 மணிக்கு மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/it-2026-01-08-15-09-54.jpg)