தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

Advertisment

அதன்படி மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக வழங்கி இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்துள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே எஸ்.எஸ்.ஆர் பணியில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், சர்வர் மெதுவாக இயங்குவதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இன்று (25-11-25) பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் முன்பு பேசிய மம்தா பானர்ஜி, “குஜராத்தில். பாஜக தோற்கடிக்கப் போகிறது. வங்காளத்தை வெல்ல அவர்கள் குஜராத்தை இழப்பார்கள். ஏன் எஸ்.ஐ.ஆர் இவ்வளவு அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது? தேர்தலுக்கு முன்பு எஸ்.ஐ.ஆர் ஏன் மேற்கொள்ளப்படுகிறது? மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

Advertisment

எல்லை மாவட்டங்களில் இவ்வளவு காலமாக சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருந்தால், சர்வதேச எல்லையைப் பாதுகாக்க யார் பொறுப்பு என்று நான் கேட்க விரும்புகிறேன்? விமான நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் நான் இங்கே இருக்கும் வரை, அவர்கள் உங்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன். வங்காளத்தில் நீங்கள் என்னை குறிவைக்க, என் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலை நடத்தினாலும் அதை நான் தனிப்பட்ட தாக்குதலாகக் கருதி, இந்த முழு நாட்டையும் உலுக்குவேன். தேர்தலுக்குப் பிறகு நான் முழு நாட்டையும் சுற்றிப் பார்ப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.

ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் அச்சம் காரணமாக, பொதுமக்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதும், பணி சுமையின் காரணமாக பி.எல்.ஓ தற்கொலை செய்து கொள்வதும், மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருப்பதும் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.