மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களை அம்மாநில அரசுகள் வலுகட்டாயமாக வெளியேற்றுவதாகவும், அவர்களை துன்புறுத்துவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. உரிய ஆவணங்களை வைத்திருந்தாலும், அவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அடையாளப்படுத்தி பா.ஜ.க மாநில அரசுகள் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்த 444 பேரை ஒடிசா பா.ஜ.க அரசு கைது செய்துள்ளது. இந்த விவகாரத்திற்கு மேற்கு வங்க மாநில அரசான திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நாடியா, முர்ஷிதாபாத், மால்டா, பிர்பும், பூர்பா பர்தமான் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் போன்ற வங்காள மொழி பேசும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அரசு கூறியுள்ளது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி எம்.பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், ‘வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ஒடிசா அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசு சமீபத்தில் வங்காள மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வங்காளதேச நாட்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ளது. ஒடிசாவின் சுற்றுலா வருவாயில் 50% வங்காள சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வருகிறது. அவர்கள் உங்கள் ஹோட்டல்களில் தங்குபவர்கள், உங்கள் உணவகங்களில் சாப்பிடுபவர்கள், உங்கள் புனிதத் தலங்களைப் பார்வையிடுபவர்கள். வங்காள சுற்றுலாப் பயணிகள் ஒடிசாவுக்குச் செல்வதை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சனை, கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கைது நடவடிக்கை குறித்து ஒடிசா அரசுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது. அப்போது, செல்லுபடியாகும் குடியிருப்பு அல்லது குடியுரிமை ஆவணங்களை வழங்கத் தவறியதால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒடிசா அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒடிசா உள்ளிட்ட பா.ஜ.க மாநில அரசுகள் துன்புறுத்துவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (16-07-25) மாபெரும் பேரணி நடத்தினர். கொல்கத்தாவின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் பேரணி நடத்திய மம்தா பானர்ஜி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், 3 கி.மீ வரை நடந்துச் சென்று பா.ஜ.க அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணியில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1,500 போலீசார் முழுப் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேரணிக்குப் பிறகு கூட்டத்தில் உரையாற்றிய மம்தா, “நான் இனிமேல் வங்காள மொழியில் பேசுவேன் என்று முடிவு செய்துவிட்டேன். என்னை தடுப்பு முகாமில் போடுங்கள்” என்று கூறினார்.