மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபர், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் நடைமுறை இருந்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 16ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ (விபி ஜி ராம் ஜி) என்ற பெயரில் திட்டத்தை மாற்றியமைத்ததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

Advertisment

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, இந்த புதிய மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம், கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்களுக்கு சட்டப்பூர்வ ஊதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்தவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு புதிய திட்டம் செயல்பட இருக்கிறது..

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரைச் சூட்டி அதிரடி  காட்டியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால், மாநில அரசின் நிதியைக் கொண்டு 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு வேலை வழங்க ‘கர்மஸ்ரீ’ என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கினார். அதன்படி அந்த திட்டத்தின்படி, மாநில அரசு சார்பில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதற்கிடையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மத்திய அரசு மாற்றியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், மாநில அரசு சார்பாக செயல்பட்டு வரும் கர்மஸ்ரீ திட்டத்தின் பெயரை ‘மகாத்மா காந்தி கர்ம்ஸ்ரீ பிரகல்ப’ என்று மாற்றியமைத்து அதிரடி காட்டியுள்ளார்.