Mamata Banerjee argued furiously in the Supreme Court On SIR
தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் (எஸ் ஐ ஆர்) நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எஸ்.ஐ.ஆர் -ஐ கடுமையாக எதிர்த்து வந்தார்.
விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் இதை முறைப்படுத்தக் கோரியும் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில், எஸ்ஐஆர் க்கு எதிராக மேற்கு வாங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி ஆகியோர் அமர்வு முன்பு இன்று (04-02-26) விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மம்தா பானர்ஜி தானே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். ஆரம்பத்தில் மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான், “எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை முடிக்க இன்னும் 4 நாட்கள் மட்டும் உள்ளன. ஆனால், இதுவரை பதிவு செய்யப்படாத 32 லட்சம் பேர். கிட்டத்தட்ட 1.36 கோடி பேர் முரண்பாட்டு பட்டியலில் உள்ளனர். 63 லட்சம் பேருக்கான முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. இருப்பிடச் சான்றிதழ்கள், ஆதார், ஓ.பி.சி சான்றிதழ். இவற்றில் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்கள் 4 முதல் 5 மணி நேரம் வரிசையில் நிற்கிறார்கள்.
முரண்பாடு பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயர்களையும் மேற்கோள் காட்டுவதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் பதிவேற்ற வேண்டும். இதை முந்தைய விசாரணையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குப் பிறகு, பெயர், வயது, பாலினம் ஆகியவை மட்டும் தான் உள்ளன. தவிர வேறு எந்த காரணங்களும் கொடுக்கப்படவில்லை” என வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதி ஜோய்மாலியா பக்ஷி, “அது வலைத்தளத்தில் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார். அதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘சில சுருக்கமான காரணங்கள் கூறப்பட வேண்டும். மக்கள் ஏன் பட்டியலில் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெயர் பொருந்தாதது தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் திரும்பப் பெறுமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்’ என்று கூறினார்.
அதை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒருவர் தட்டா (Dutta) என்று எழுதுகிறார், சிலர் அதை தத்தா (Datta) என்று எழுதலாம் என்று வைத்துக்கொள்வோம்’ என்று கூறிய போது, வழக்கறிஞர் ஷியாம் திவான், “நாங்கள் தத்தா, கங்குலி, ராய் மற்றும் ரே ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இது ஒரு பரிந்துரை. பட்டியலில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் சிறிய பெயர் பொருத்தமின்மை கொண்டவர்கள். உண்மையான வாக்காளர்களின் உதாரணங்களை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். சிராக் திப்ரேவாலின் தந்தையின் பெயரின் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஏனெனில் தந்தையின் பெயரின் நடுப் பெயராக குமார் உள்ளது. சில சமயங்களில் இந்த நடுப்பெயர் விடுப்பட்டு போகலாம். வங்க மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உச்சரிப்பில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி சூர்யகாந்த், “திவேதி, நீங்கள் உள்ளூர் பேச்சுவழக்கில் பேசும் விதத்தில் சில முரண்பாடுகள் உள்ளன, இதுபோன்ற விஷயங்கள் இந்தியா முழுவதும் நடக்கின்றன” என்று கூறினார்.
இதையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாதிடுகையில், “நான் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவள். நீதி கதவின் பின்னால் அழுது கொண்டிருக்கும்போது, எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை என்று நினைத்தோம். நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு 6 கடிதங்கள் எழுதினோம். ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒருபோதும் பதில் கிடைக்கவில்லை.நான் என் கட்சிக்காகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மாநில மக்களுக்காக போராடுவதற்காக தான் நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “மேற்கு வங்காள அரசும் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. மாநிலத்தின் வழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களில் சிறந்தவர்கள் எங்களுக்கு உதவ உள்ளனர். ஜனவரி 19 அன்று, மாநிலம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை வழக்கறிஞர் சிபல் விளக்கினார். பின்னர் வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இன்று உங்கள் மனுவில் சில கூடுதல் சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. தீர்வு வருவதையும், எந்த நிரபராதியும் விடுபடாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜி, “ நான் உங்களுக்கு உதாரணம் தருகிறேன். என்னுடைய புகைப்படங்களை உங்களுக்குக் காட்டுகிறேன். அது என்னுடைய புகைப்படம் அல்ல, அது முன்னணி செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர்செயல்முறை நீக்குவதற்கு மட்டுமே. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண், மாமியார் வீட்டிற்குச் செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம், பட்டியலில் கொடுக்கப்பட்ட கேள்விகள், ஏன் அவள் கணவரின் பட்டப்பெயரை பயன்படுத்துகிறாள் என்பது போன்றவை மட்டுமே கேட்கப்படுகின்றன. மாமியார் வீட்டிற்குச் சென்ற சில பெண்களை ஒருதலைப்பட்சமாக நீக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் ஏழைகள் பிளாட் வாங்குகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் இடம் மாறுகிறார்கள். ஆனால் அனைத்தும் நீக்கப்படுகின்றன. ஆதார் இருந்தால் எங்களுக்கு இன்னொரு சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வசிப்பிட சாதிச் சான்றிதழ் போன்றவை எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள்தான் அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைத்தனர். 2 மாதங்களில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மக்கள் வெளியே இருக்கும்போது இதைச் செய்தார்கள். பி.எல்.ஓக்கள் தற்கொலை செய்து கொண்டனர், தேர்தல் அதிகாரிகளைக் குறை கூறினர். மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது, ஏன் அசாம் குறிவைக்கப்படவில்லை? ஏன் அசாம் கூடாது? முதல் கட்டத்தில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர், பலர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் ஆணையம், மன்னிக்கவும் வாட்ஸ்அப் ஆணையம் இதையெல்லாம் செய்கிறது” என்று ஆவேசமாக வாதிட்டார்.
நீதிமன்றத்தில் இப்படியாக காரசாரமாக வாதம் நடைபெற்றதை அடுத்து, மம்தா பானர்ஜி தொடர்ந்த மனு மீது 2 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Follow Us