நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். மேலும், ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாவத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இன்று (29-07-25) பேசினார். அப்போது அவர், “மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் ஜம்மு-காஷ்மீருக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாகக் கூறனார். அது அழிக்கப்பட்டதென்றால், பஹல்காம் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ள பல விஷயங்களை நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி தனது திட்டமிடப்பட்ட ஜம்மு-காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். இதுவும் நான் முன்பே எழுப்பிய ஒரு பிரச்சினை, எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு சந்தேகித்ததா? அப்படியானால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் செல்வதை ஏன் தடுக்கவில்லை?.

மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் நானும் பிரதமருக்கு கடிதம் எழுதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கோரினோம், ஆனால் அந்தக் கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. எங்கள் கடிதங்கள் குப்பைப் பெட்டியில் கொட்டப்படுகின்றன. பிரதமர் மோடியிடம் மிகுந்த ஆணவம் இருப்பதால், எதிர்க்கட்சிகளின் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கூட அவருக்கு இல்லை. அவர்கள் அதைப் படிப்பது கூட இல்லை. இந்த அதிக ஆணவம் நல்லதல்ல. உங்களுக்கு இவ்வளவு ஆணவம் இருந்தால், ஒரு நாள், உங்கள் ஆணவத்தை கிழித்து எறியும் நபர்கள் வருவார்கள். ஓரிரு வாக்கியங்களை எழுதி பதில் சொல்ல உங்களுக்கு நேரமில்லையா?. 1962 இந்திய-சீனப் போரின் போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஒப்புக்கொண்டார், மக்களிடமிருந்து எதையும் மறைக்கக் கூடாது என்று கூறினார். குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலாவது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் நாங்கள் கேட்டோம். அந்தக் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டோம், பிரதமர் மோடி எங்கே இருந்தார்? அவர் ஏன் அங்கு இல்லை? நீங்கள் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றீர்கள். இதுதான் உங்கள் தேசபக்தியா?. அவர் இன்று சபையில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். கேட்கும் திறன் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.

2016-ல் உரி மற்றும் பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல்கள், 2019-ல் புல்வாமா மற்றும் இப்போது 2025-ல் பஹல்காம். இந்த சம்பவங்கள் அனைத்தும், தேசிய பாதுகாப்பில் மீண்டும் மீண்டும் புலனாய்வுத் தோல்வியில் இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு யார் பொறுப்பு?. தவறைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள்?.  இதற்கு யார் பொறுப்பு என்று நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன்? பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பஹல்காமில் மட்டும் ஐந்து தாக்குதல்கள் நடந்துள்ளன. தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் அவற்றை சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள்? உள்துறை அமைச்சர் பொறுப்பானவர் என்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பொறுப்பேற்கவில்லை என்றால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும்.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூட கூறினார். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பாதுகாப்பு குறைபாடுதான் இந்த சம்பவத்திற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன் என துணைநிலை ஆளுநர் அல்ல, உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசுகிறீர்கள். இந்திரா காந்தியின் கீழ், நாங்கள் பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து வங்கதேசத்திற்கு சுதந்திரம் கிடைப்பதை உறுதி செய்தோம்” எனப் பேசினார்.