Mallikarjun Kharge questions at the Deputy Chairman of the Rajya Sabha for CISF allow house issue
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளில் வலியுறுத்தி வருகின்றனர். இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பேசினர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் அவைக்குள் மக்கள் பிரச்சனை குறித்து முழக்கமிடும் போது துணை ராணுவப் படையான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுத்து நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து மாநிலங்களவை துணைத் தலைவருக்கு கடிதமும் எழுதினார்.
மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில், ‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும்போது, சிஐஎஸ்எஃப் (CISF) பணியாளர்கள் அவைக்குள் ஓடி வந்து தடுக்கும் விதம் எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதை நேற்றும் இன்றும் பார்த்தோம். நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இது மிகவும் ஆட்சேபனைக்குரியது, இதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். எதிர்காலத்தில் உறுப்பினர்கள் பொதுமக்களின் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பும்போது, சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அவைக்குள் வரமாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவித்தார். அவருடன் சேர்ந்த திமுக எம்.பியான திருச்சி சிவாவும், மாநிலங்களவைக்குள் பாதுகாப்பு படையினர் எதிர்க்கட்சிகளை தடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (05-08-25) மாநிலங்களவையில் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப் வீரர்களை ஈடுபடுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவை துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண், “எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நாடாளுமன்ற பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது புதிய நடைமுறை அல்ல” எனக் கூறினார். உடனடியாக எழுந்த மல்லிகார்ஜுன கார்கே, “நமது முந்தைய தலைவர்கள் கூட இடையூறுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறி வந்தனர். ஆனால் இன்று நான் உங்களிடம் கேட்கிறேன், இந்த அவையை யார் நடத்துகிறார்கள், நீங்களா அல்லது அமித் ஷாவா?” என்று மாநிலங்களவை துணைத் தலைவரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “சிஐஎஸ்எஃப் வீரர்கள் எதற்கு சபைக்கு அழைக்கப்பட்டார்கள்? மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்களான நாங்கள் பயங்கரவாதிகளா?” என்று ஆவேசமாகப் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் மூத்த தலைவர். சபைக்குள் ராணுவ வீரர்கள் கொண்டு வரப்படுகிறார்கள் என்றும், சிஐஎஸ்எஃப் வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள் என்றும் டெல்லி போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். மார்ஷல் மட்டுமே சபைக்குள் நுழைய முடியும் என்பது பதிவில் தெளிவாகத் தெரிகிறது. அன்று மார்ஷல்கள் மட்டுமே இங்கு இருந்தனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தவறாக வழிநடத்தி இங்கே உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அவர் உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகருக்கு ஒரு பொய்யான கடிதம் எழுதி தவறான குற்றச்சாட்டை முன்வைக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். கிரண் ரிஜிஜு பேச பேச, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.