அண்மையில் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை 'துரோகி' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்திருந்தது மதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யாவும் ஊடங்களின் வாயிலாக பதிலளித்து வருகிறார். 

இந்நிலையில் மாமல்லபுரத்தில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் காரில் பொருத்தப்பட்டிருந்த மதிமுக கொடியை அகற்றியதோடு மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர மதிமுக சார்பில் நகரச் செயலாளர் பாபு ஏற்பட்டில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கு ஆதரவாக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் அங்கு கூடிய மல்லை சத்யா ஆதரவாளர்கள் காரில் பொருத்தப்பட்டிருந்த மதிமுக கொடியை 50க்கும் மேற்பட்ட மதிமுகவினர் கழற்றி கீழே வீசினர். மேலும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். 'மதிமுக கட்சிக்கு அடையாளம் கட்டியவர் மல்லை சத்யா. 32 ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்துள்ளார். அவருடன் களத்தில் தாங்கள் பணியாற்றி வந்தோம். வைகோ தன்னுடைய மகனுக்கு முடிசூட்ட நினைத்து துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை துரோகி எனக் கூறி மாத்தைய்யாவோடு ஒப்பிட்டுள்ளது கண்டனத்திற்குரியது' என தெரிவித்து மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி, தங்களுடைய காரில் இருந்த மதிமுக கொடியை அகற்றி கீழே வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.