கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பூதாகரமானது. கட்சித் தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு துரை வைகோ தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. துரை வைகோ, ஒருவர் என குறிப்பிட்டது அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இப்படியான பல்வேறு அரசியல் சலசலப்புகளுக்கு இடையே மதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள், இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். நடந்தவற்றை மறந்து ஒன்றாக இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என வைகோவும் வேண்டுதல் வைத்ததை அடுத்து, இருவரும் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து, தன்னுடைய ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்ப பெற்றார்.  கடந்த 2 மாதங்களாக கட்சிக்குள் எந்தவித சலசலப்பு ஏற்படாத நிலையில், தற்போது மீண்டும் மதிமுகவில் சர்ச்சை நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூலை 10ஆம் தேதி வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மல்லை சத்யா குறித்து பேசிய வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வைகோ வைத்த குற்றச்சாட்டுக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாலர் மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. நான் உயிராக நேசித்த என் அன்புத் தலைவர் வைகோ, ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தாயகத்தின் ஒப்பற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார். சான்றோர் பெருமக்களே, நான் மாத்தையா போன்று துரோகியா, நீதி சொல்லுங்கள். வைகோ, தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சி தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்ட கடந்த 09 07 25 தொடங்கி 13 07 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை, என் தூக்கத்தை தொலைத்து விட்டேன்.

என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் வைகோ வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே. அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான். உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல.

Advertisment

தற்போது உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வின் போது நான் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க மறுத்து அதற்கான காரணத்தை 2023 மே மாதம் 22 தேதி தங்களை தாயகத்தில் சந்தித்து தற்போது நிலவும் சூழ்நிலையை அப்போதே தெரிவித்தேன். தங்களின் வற்புருத்தலின் காரணமாகவே நான் அப்போது ஒத்துக் கொண்டேன். தங்களிடம் நான் எதையெல்லாம் கூறினேனோ அது தற்போது நடந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கின்றேன். மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய பயணத்தில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்த தங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி வந்துள்ளேன். யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நான் விட்டுக் கொடுத்தவன் அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். காலம் முழுவதும் தங்களுக்கும் மதிமுக விற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய அரசியல் முகவரி நீங்கள்தான் தங்களைப் போன்றவரை தலைவராக பெற்றது நான் பெற்ற பேறு உங்களை எப்போதும் என் இதயத்தில் வைத்து பூஜித்து வருவேன். உங்களின் உயர்ந்த அரசியல் நோக்கம் வெற்றிபெற என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த நிலை கழகத்தில் இருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியாகவும், என்னை நிபந்தனையற்று நேசித்த வைகோவின் கண்மணிகள் பலருக்கு வருத்தமாகவும் இருக்கும்.  

உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றவன் என்ற முறையில் நீங்கள் காட்டிய தூய அன்பிற்கு நான் என்றும் அடிமைப்பட்டவன். உங்கள் ஒவ்வொருவரையும் என் இதயத்தில் ஏந்தியிருப்பேன் கவலைப் பட வேண்டாம். இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன். இன்பமோ துன்பமோ விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மரம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்ற சீனத்தின் தலைவர் மாவோவின் பொன்மொழிக்கு இலக்கணமாக கடந்த நான்கு நாட்களாக நான் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்தேன். காரணம், நான் மதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து வந்த நிலையில் என்மீது மதிமுக முதன்மைச் செயலாளர் துரை எம்பி பொதுவெளியில் விமர்சித்து பேசியுள்ளார். பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை எனக்கு உண்டு. என் மெளனத்தைக் கலைக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.